கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தொடரும் கூடங்குளம் போராட்டம் - சில தகவல்கள்




நண்பர்களே நான் முன்பே ஒரு முறை இந்த வலைப்பூவில் கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன்.அப்போதே இந்த போராட்டத்தின் மீது எனக்கிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.இந்த போராட்டக்காரர்கள் ஏதோ உள்நோக்குடன் செயல்படுகிறார்கள் என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். சமீப காலாமாக சில கட்டுரைகளைப் படித்தும்,போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தும் வந்த பிறகு தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கூடங்குளம் போராட்டத்தின் நூறாவது நாள் என புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒரு செய்தி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.வர்த்தக ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் நூறாவது நாள் விழ கொண்டடுவதைப் போல்,அர்த்தமற்ற இந்த போராட்டமும் நூறு நாட்களுக்கும் மேல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நிபுணர் குழு ஒன்றை அரசு நியமித்து இந்த அணு மின் நிலையத்தின் நிறை குறைகளை குறித்த நேர்மையான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட வேண்டுமென்று நமது முந்தைய கட்டுரையில் தெரிவித்திருந்தோம். ஆனால் மாநில அரசைத் தான் விமர்சனம் செய்திருந்தோம்.இப்போது மத்திய அரசு ஒரு படி மேலே போய் நிபுணர் குழு ஒன்றை நியமித்து அவர்களைக் கூடங்குளத்துக்கே  அனுப்பி மக்களின் கேள்விகளுக்கு விடயளிக்கும்படி செய்துள்ளது.ஆனால் எந்த விளக்கமளித்தாலும் திருப்தி அளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

அப்துல் கலாம் போன்ற கற்றறிந்த விஞ்ஞானிகள் உத்திரவாதமளித்த பிறகும் கூட இவர்கள் திருப்தி அடையவில்லை என்று கூறுவது ஒன்றைத் தான் உணர்த்துகிறது.இந்த போராட்டக் குழு செய்வது விதண்டாவாதம் என்பது தான் அது. உதயகுமார் மற்றும் அவரை ஆதரிக்கும் ஒரு கூட்டம் அப்துல் கலாம் அவர்கள் ஒன்று அணு சக்தி விஞ்ஞானி இல்லையே அவருக்கு எப்படி இந்த அணு உலை பாதுகாப்பானதா இல்லையா என்று தெரியும் என கேட்கிறார்கள். அப்படியானால் இந்த போராட்டத்திற்கு தன்னைத் தானே தலைவன் என்று அறிவித்துக் கொண்டுள்ள உதயகுமார் என்பவர் யார்? அவர் என்ன அணு சக்தி விஞ்ஞானியா அல்லது வேறு என்ன விஞ்ஞானி?

இந்த போராட்டத்தில் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களின் பெயர்களைப் பார்ப்போம்.உதயகுமார், புஷ்பராயன் மற்றும் மைபா ஜேசுராஜன்.இதில் புஷ்பராயன் என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து இல்லற வாழ்க்கைக்கு வந்தவர்.ஜேசுராஜன் என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார்(செய்தி : நவம்பர் 24,தினமலர்).சரி இந்த உதயகுமார் என்பவரைப் பற்றியும் சில தகவல்களை பார்ப்போம்.உதயகுமார் தற்போது இடிந்தகரையில் ஜெயகுமார் எனும் பாதிரியாருடன் தங்கி வருகிறார்.அந்த பாதிரியார் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பவர்(இவை ஊடகங்களில் வந்த செய்தி).இந்த உதயகுமார் அமெரிக்காவில் ஹிந்து மதத்தை விமர்சித்து/எதிர்த்து புத்தகங்களை எழுதியவர்.இவர் ஒரு மதமாற்றம் செய்யப்பட கிறிஸ்தவர் என்று கூறுகிறது விக்கிப்பிடியா இணைப்பு (http://en.wikipedia.org/wiki/S._P._Udayakumar).இப்படி முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதன் நோக்கமென்ன?கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. இது போன்ற விஷயங்களில் பாதிரியார்களும் தேவாலயங்களும் பங்கு கொள்வது ஏன்? உண்மையைச் சொன்னாள் இவர்கள் பங்கு கொள்ளவில்லை இவர்கள் தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்றளவும் அது தொடர காரணமாய் இருக்கிறார்கள்.

இவர்கள் இந்தப் போராட்டத்தை இத்தனை நாட்கள் நடத்துவதற்கு போதுமான நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது? சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.அப்படிப் பட்ட போராட்டத்தையே தொடர்ந்து நடத்த இயலவில்லை,ஆகா இந்த கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

இந்தியாவில் உள்ள 22 அணு உலைகளில் Nuclear Suppliers Group(NSG) என்றழைக்கப்படும் சர்வதேச அமைப்பின் மேற்பார்வைக்கு உட்பட்டது. மீதமிருக்கும் 8 உலைகளுள் இந்த கூடங்குளம் அணு உலையும் ஒன்று. மேலும் இந்த அணு உலைப் பொறுத்த வரையில் நமது வர்த்தகம் முழுவதும் ரஷிய நாட்டுடன் தானே தவிர அமெரிக்காவுடன் இல்லை.(17 நவம்பர் தினமணி மற்றும் 15 நவம்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் குருமூர்த்தி அவர்களின் கட்டுரையைப் படிக்கவும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் : http://expressbuzz.com/biography/Forces-halting-our-n-surge/333225.html

இதில் மற்றொன்றை நாம் கவனிக்க வேண்டும்.மத்திய அரசு இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் காரணம் என்ன? அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்பதற்காகத் தான் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு போராடுபவர்கள் மத்திய அரசிடமிருந்து தங்கள் சந்தேகங்களைக் கேட்க போராடவில்லை.அவர்கள் போராட்டமே இந்த உலையே கூடாது என்பதற்காகத் தான்.அதி புத்திசாலித்தனமாக நிபுணர்களை மடக்குவதாக நினைத்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளை பார்ப்போம்.

நாட்டின் பாதுகாப்பு, ரகசிய விவரங்கள் சார்ந்த கேள்விகள்
1. அணு உலை அமைந்துள்ள இடம்
2. அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்
3. அணு உலையின் செயல்திறன் அறிக்கை
4. எரிபொருள் நிரப்புவது எப்படி?
5. யுரேனிய எரிபொருள் வாங்கும் முறை; எங்கிருந்து வாங்கப்படுகிறது
6. எரிபொருட்களை கொண்டு வரும் பாதைகள் மற்றும் போக்குவரத்து குறித்த விவரம்
7. தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது. அதன் பாதைகள் குறித்த விவரம்
8. அணு கழிவுகள் அகற்றுதல் மற்றும் கையாளும் தொழில்நுட்பம்
9. அணு மறு சுழற்சி குறித்த விவரம்
10. அணு மறு சுழற்சி நிலையம் குறித்த விவரம்
11. குளிர்நீர் வெளியேற்றும் தொழில்நுட்பம்
12. மன்னார் வளைகுடா பகுதிக்கான பாதுகாப்பு
13.மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கான பாதுகாப்பு
14.பயங்கரவாத அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கை
15. இத்திட்டத்தால், சீனா, இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான நட்புறவு மாற்றம் குறித்த விவரம்
16. எரிபொருளுக்கான கனிம சுரங்கங்கள், அதை தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள்
17. ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்
18. ராணுவ கண்காணிப்பு விவரம்
19. அணு உலையின் தொழில்நுட்ப விவரம்
மற்றும் அதற்கான மொத்த செலவு விவரம்
20. கடல் பாதுகாப்பை பலப்படுத்துவது எப்படி?
21. கடல் வழி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விவரம்
22. ராணுவம் பணியமர்த்தப்படும் பகுதிகள் எவை?
23. மீதமுள்ள நான்கு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்த விவரம்
24. அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடையேயான ஒப்பந்த விவரம்
25. ஆயுதங்கள் தயாரிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள்

"அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்","ராணுவ கண்காணிப்பு விவரம்","ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்" இத்யாதி போன்ற கேளிவிகள் எல்லாம் இவர்களுக்கேதற்கு. மேலும் அதிர்ச்சி தரும் ஒரு தகவலையும் மத்திய குழுவின் தலைவர் திரு.முத்துநாயகம் வெளியிட்டிருக்கிறார்.அதாவது போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணு உலை குறித்த வரைபடத்தைக் கேட்கிறார்கள் என்பது தான் அது( இந்த இணைப்பைப் படியுங்கள் : http://tamil.oneindia.in/news/2011/11/18/koodankulam-plant-is-extremely-safe-expert-team-aid0128.html). இது எல்லாம் இவர்களுக்கெதற்கு? இதை இவர்கள் அந்நிய நாட்டிற்கு விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மூலமாக அந்நிய நாட்டவர்கள் இந்த அணு உலை முடக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் நமக்குத் தோன்றும் கருத்து.

கல்பாக்கம்,தாராபூர்,கார்வார் போன்ற இடங்களில் அணு மின் நிலையங்கள் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. போபால் சம்பவத்தை இந்த அணு மின் நிலையத்துடன் ஒப்பிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வடிவமைப்பு அமெரிக்கத் தரத்துக்கு இல்லை என்பது அதை அனுமதிக்கும் முன்பே அரசுக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் வேரன் ஆண்டர்சன்னுக்கும் முன்பே தெரியும் என்று செய்திகள் கூறுகின்றன .மேலும் விஷவாயு சிறிய அளவில் வெளியேறத் தொடங்கியபோதே கொடுக்கப் பட்ட எச்சரிக்கையினை அலட்சியம் செய்து விட்டது அப்போது இருந்த அரசு.மேலும் அந்த நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இத்தனை ஆராய்ச்சிகளும் இவ்வளவு நிபுணர்களும் விளக்கமோ உத்திரவாதமோ வழங்கவில்லை.கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் தொழில்நுட்பம் எப்படி என்றால்,சுனாமியோ அல்லது பூகம்பமோ ஏற்பட்டால் அணு உலை தானே நின்று விடும்.அதனால்(அணு உலையினால்) எந்த பாதிப்பும் ஏற்படாது.மக்கள் அச்சப்படும் பொதுவான விஷயமான கதிர்வீச்சுத் தாக்குதல்களும் ஏற்படாமல் இருக்கும்படித் தான் இந்த அணு உலை அமைந்துள்ளதாக நிபுணர் குழு தெரிவிக்கிறது.

எந்தக் கதிர்வீச்சும் வெளிவரப் போவதில்லை..எரிபொருள் நிரப்பப்படும் யூனிட்டே பல அடுக்கு பாதுகாப்பில் தான் வைக்கப்பட்டுள்ளது.இதையும் தாண்டி அந்த உலையில் உட்புரச்சுவர் ஆறு மில்லி மீட்டர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட்டுக்களால் கவர் செய்யப்பட்டுள்ளது.அதற்கும் வெளியே நான்கு அடி கான்க்ரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட பின்பும்,இதை விளக்கிய பிறகும் கூட ஆர்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடுவது,இந்த உலை எப்படியாவது செயல்படாமல் தடுத்து விட வேண்டுமென்கிற அவர்களது என்னத்தைத்தான் காட்டுகிறது.



அப்துல் கலாம் அவர்கள் பார்வையிட்டு,இது பாதுகாப்பான உலை என்று கருத்துத் தெரிவித்தப் பிறகு,உதயகுமார் புதிய தலைமுறையில் பேட்டிக் கொடுத்தார்.மத்திய அரசு போலி விஞ்ஞானிகளை வைத்துத் தங்கள் போராட்டத்தை முடக்கப் பார்க்கிறதென்று.அவர் அப்துல் கலாம் அவர்களை நேரடியாகச் சொல்லவில்லை.இந்த அணு மின் நிலையத்தை ஆதரிப்போர் அனைவரும் போலி விஞ்ஞானி என்று எண்ணிச் சொன்னாரோ என்னவோ.வந்தவர்கள் எல்லாம்(கலாம் அய்யா உட்பட)போலி விஞ்ஞானிகள் என்றால்,யார் தான் உண்மை விஞ்ஞானி? உதயகுமார் தானோ? இந்த போராட்டத்திலும் விளம்பரம் தேடிக்கொள்ள வழக்கம் போல புறப்பட்டு விட்டார்கள் திருமாவளவனும் வைகோவும்.மருத்துவர் அய்யா திரு ராமாதாசு அவர்கள் ஒரு படி மேலே சென்று கல்பாக்கம் அணு மின் நிலையத்தையே மூட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார். இவர்கள் இப்படித்தான்,விடுங்கள் இவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய பிறகொரு நகைச்சுவைப் பதிவு எழுதுகிறேன்.

நண்பர்களே,நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கையோ அல்லது தொலைக்காட்சி செய்தியையோ பார்த்து விட்டு இந்தக் கட்டுரையை எழுதவில்லை.சில பத்திரிக்கைகள்,சில தொலைக்காட்சி செய்திகள்,சில நிபுணர்களின் விளக்கங்கள்,சில அறிஞர்களின் கட்டுரைகள் போன்றவற்றஎல்லாம் படித்து விட்டுத் தான் இதை எழுதுகிறேன். நான் படித்தவற்றுள் சிலவற்றுக்கான இணைப்பை இந்த கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் இந்தக் கட்டுரையை எழுதுவதால் எனக்கு தனிப்பட்ட லாபமென்று எதுவுமில்லை. ஆனால் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பாதிரியார்களுக்கும் நேற்று முளைத்தத் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல விதத்திலும் லாபம் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதை விட முக்கியம் இந்த அணு உலை மூடப்பட்டால் நமக்கு பலத்த நஷ்டம் ஏற்படப் போவது நிச்சயம்.நான் இந்த அணு மின் நிலையத்தை கட்டுவதற்காக செலவிடப் பட்ட பணத்தைச் சொல்லவில்லை.இந்த அணு மின் நிலையத்தின் மூலம் நமக்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இது மூடப்பட்டால் அது நமக்கு கிடைக்காது. மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது தேசத்துரோகமாகும்.இந்தப் போராட்டக்காரர்களையும் இவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.அணு உலை விரைவில் செயல்படத் தொடங்க வேண்டும்.இது தான் நமது கருத்து.
[ மேலும் படிக்க ]

அழிவுக்கு அறிகுறி



சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பலரும் விமர்சிக்கிறார்கள்.ஆனால் இது தனது அரசாங்கத்துக்கு அவ பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று முதல்வரே முனைந்து எடுத்த முடிவு போல தோன்றுகிறது.இல்லையெனில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்வாரா?இந்த இடமாற்றத்தை விமர்சிப்பவர்களின் வாயடைக்க இந்த கட்டடத்தை,சிறப்பு வசதிகள் கொண்ட குழந்தைகள் மருத்துவமனை அமைக்க பயன்படுத்துவோம் என்று அறிவித்து விட்டார்.

நேற்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் விவாதிப்பதைப் பார்த்தேன்.அவரால் சரளமாகப் பேசக் கூட முடியவில்லை.அவரது பேச்சாற்றலைக் குறை சொல்லவில்லை,இந்த விஷயத்தில் அம்மையாரின் இந்த உத்தரவைப் பலமாக ஆதரிக்கக்கூட முடியாமல் தினரியதைத்தான் குறிப்பிட்டேன். இந்த உத்தரவுக்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நூலகம் இருக்கக் கூடாது. இந்த நூலகம் வரலாற்றுப் புகழ் பெற்ற நூலகமாக மாறினால் அதைத் திறந்தவர் கலைஞர் என்பதையும் வரலாறு சொல்லும் . அதைத் தடுக்க ஒரே வழி 'இந்த' நூலகத்தையே அகற்றி விடுவது தான்.

 "நாங்கள் நூலகத்தை ஒரே அடியாக மூடிவிடவில்லை இடமாற்றம் தான் செய்திருக்கிறோம்,குழந்தைகள் மருத்துவமனை வருவதை ஏன் எதிர்க்கிறீர்கள்? அதில் என்ன தவறு?" என்று ஆளும் கட்சியினர் சிலரும்,அரசை ஆதரிக்கும் சிலரும் கேட்கிறார்கள். குழந்தைகள் மருத்துவமனை வருவதை யாரும் எதிர்க்கவில்லை.ஏன் மருத்துவமனையைக் கட்டச் சென்னையில் வேறு இடமே இல்லையா?தமிழகத்தில் வேறு எங்கும் இந்த மருத்துவமனையைக் கட்ட முடியாதா?கலைஞர் திறந்து வைத்த நூலகத்தைத் தான் மருத்துவமனையாக மாற்ற வேண்டுமா?

சரி சுமார் 200 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்டக் கட்டடத்தை வீணாக்கக்கூடாது என்று மருத்துவமனைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்.மருத்துவமனைக் கட்ட இந்தக் கட்டட அமைப்புச் சரியாக இருக்குமா?அதற்கு மேலும் பல நூறு கோடிகள் செலவாகாதா?அப்படிச் செலவு செய்தால் கூட எந்த பாதிப்புமின்றி மருத்துவமனைக் கட்டிவிட முடியுமா?ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.இவர்கள் சொல்கிறபடி இடமாற்றம் செய்கிரார்களென்றே  வைத்துக்கொள்ளலாம். அத்தனைப் புத்தகங்களும் தவறாமல் இடமாற்றம் செய்யப்படுமா?இந்த நூலகத்தில் இருந்ததைப் போல அவை தலைப்புக்கேற்றவாறு ஒழுங்கு படுத்தி வைக்கப்படுமா? இவை அத்தனையும் செய்ய காலதாமதமாகாதா?இதனால் இந்த நூலகத்தை வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்குத் தான் பாதிப்பு.

நூலகம் என்பது ஏதோ பழைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் அருங்காட்சியகம் அல்ல.கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பல தகவல்களைப் பல்வேறு புத்தகங்களிலிருந்தும் திரட்ட நூலகமே சிறந்த இடம். ஓரளவுக்கு அனைத்துத் தனியார் கல்லூரிகளிலும் ஒரு சிறப்பான நூலகம் இருக்குமென்றே வைத்துக் கொண்டாலும் கூட,அனைத்துப் பள்ளி,கல்லூரிகளிலும் சிறப்பான நூலகங்கள் பரமாரிக்கப் படுவதில்லை.மாணவர்களுக்கென்றே இல்லை,படிக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் நூலகங்கள் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். என் தனிப்பட்டக் கருத்து என்னவென்றால் இன்னும் பல நூலகங்கள் அமைக்கப் பட வேண்டும்.ஒரு கன்னிமாரா மட்டுமே போதாது.அப்படி இருக்க, இருக்கிற நூலகத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக இடமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்க செயல்.

முதலில் தலைமைச் செயலகத்தை மாற்றினார்கள்.அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.கட்டடம் முழுமையாகக் கட்டப்படாத நிலையில் அதைத் தலைமைச் செயலகமாக முந்தைய ஆட்சியில் மாற்றியது தவறு தான்.அந்தக் கட்டடத்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைக் கட்டப் பயன்படுத்துவோம் என முதல்வர் அறிவித்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்குவது சாத்தியம் தானா என்பது கேள்விக்குறி தான்.அதற்கு மிக அருகில் ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதும் நினைவிருக்கலாம்.அப்படி இருக்க அந்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனயேச் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.ஆனாலும் இவை சமாளிக்ககூடியப் பிரச்சினைகள் தான் என்று வைத்துக் கொள்வோம்.

இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டக் கட்டடம் அதனால் முதல்வர் தலைமைச்செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றி விட்டார் என்று விமர்சித்தவர்கள் பட்டியலைச் சேர்ந்தவனல்ல நான்.அவரின் அந்த நடவடிக்கைக்கு அரசு தரப்பில் கூறப்பட்டக் காரணங்களை ஆராய்ந்து அரசின் முடிவுக்கு ஆதரவு தான் தெரிவித்தேன்.ஆனால் தொடர்ச்சியாக இது போன்ற நடவடிக்கைகள்,சரியான காரணமில்லாமல் எடுக்கப்படுவது கண்டனத்திற்குரியது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைத் தூசி தட்டி சில மாறுதல்களைச் செய்து வேறு பெயரில் அமல்படுத்துகிரார்கள்.கலைஞர் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி அளித்து அரசின் கஜானாவைக் காலி செய்து விட்டார் என்று சிலர் கேலிப் பேசினர்.அந்தத் திட்டம் நிறுத்தப் பட்டது. அதற்குப் பதில் 'மக்களின் பொருளாதாரத்தரம் உயர்வதற்காக" மடிக் கணினி,மின்னம்மி,மின்விசிறி இத்யாதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இப்படியே கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது அனைத்தையும் மாற்ற வேண்டுமென்று முதல்வர் நினைத்தால்,பிறகு அவருக்கு இப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."என் மனைவியைக் கலைஞர் ஆட்சியில் கட்டினேன்,இப்போது அம்மா ஆட்சி வந்து விட்டது அதனால் மாற்றி விடுங்கள்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் படலாம்.(இந்தக் கோரிக்கைச் சமூக வலைப்பின்னல்களிலிருந்துச் சுடப்பட்டது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை மாற்றும் இந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் ரத்து செய்யும் என்று தான் நினைக்கிறேன்.

தெரிந்தோ தெரியாமலோ கலைஞர் அவர்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்து வைத்தார்.அவரே எப்போதோ ஒருமுறை தான் இது போல ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறார்.அதையும் இந்த அம்மையார் கெடுத்து விடுகிறார்.முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கைகள்,அமல்படுத்தப்பட்ட நல்ல சட்டங்களை ரத்து செய்வதென்பது தமிழகத்துக்கு ஒரு சாபக்கேடு.கலைஞரின் ஆட்சியில் திறக்கப்பட்ட நூலகமாக இருந்தால் என்ன? அதை இடமாற்றம் செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் முதல்வர் அவர்கள்? இது போன்ற நடவடிக்கைகள்,இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.இது போன்ற நடவடிக்கைகள் தொடருமென்றால் அது அழிவுக்கு அறிகுறி.

[ மேலும் படிக்க ]