கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை


கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சமீபத்தில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதில் "ஓரளவு" வெற்றியும் கண்டு விட்டார்கள்.சமீப காலமாக உண்ணாவிரதம் இருப்பது ஒரு விதமான வாடிக்கை ஆகி விட்டது.சில சமயங்களில் அது வேடிக்கையாக காட்சி அளிக்கிறது.இந்த வாடிக்கை வேடிக்கைகளைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.இந்த கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதில் என்ன பிரச்சினை?

1988ஆம் ஆண்டு இந்திய அரசும் ரஷிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.ஆனால் திடீரென கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த அணு மின் நிலையத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.அரசியல் கட்சிகள் தம் பங்கிற்கு அப்பகுதி மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.

இத்தனை நாள் இல்லாத எதிர்ப்பு இப்போது எழுவதற்கு காரணம் என்ன? ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி மக்களை வெகுவாக பாதித்து விட்டதென்றும் அதன் விளைவாகவே இந்த போராட்டங்களும் எதிர்ப்புகளும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் நம் மக்களிடையே இப்படி ஒரு பயத்தை உண்டாக்குவது இயல்பு தான்.ஒரு வேளை இங்கும் அது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிந்து கொள்ளக் கூடியதே.ஆனால் ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. காரணம் அந்நாட்டின் புவியல் ரீதியான அமைப்பு அப்படி.இங்கு அப்படி இல்லை.

விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இதனால் பாதிப்பேதும் ஏற்படாது என்று தான் கூறுகிறார்கள்.2001 ஆம் ஆண்டே இந்த அணு மின் நிலையத்தைக் கட்டும் பணிகள் துவங்கி விட்டன.இந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு போராட்டங்களும் எதிர்ப்புகளும் பணிகள் முடிவடையும் நிலையில் கிளம்பி இருப்பது வியப்பாகத் தான் இருக்கிறது. தமிழகம் ஏற்கனவே மின்சார பற்றாக் குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.நானறிந்தவரையில் எந்த ஒரு தேர்தலிலும் மின் வெட்டும் மின்சார தட்டுப்பாடும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மின் வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்ற உறுதிமொழியோடு தான் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது.இவர்கள் வந்தால் ஆக்கப்பூர்வமான சில திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று எண்ணி ஒட்டு போட்ட மக்களும் உண்டு. 

இது வரையில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த அரசு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எப்போதோ துவங்கிய இந்த அணு மின் நிலையத்தின் பணிகள் சரியாக இப்போது முடிவடையும் நிலையில் உள்ளன.அதையும் நிறுத்த வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆயற்று.நமது மாண்புமிகு முதல்வர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் நோக்கம் உண்மையில் நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் இதே முதல்வர் அவர்கள் தான் சற்று தினங்களுக்கு முன்பு அணு சக்தி விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதாகவும் இந்த அணு மின் நிலையம் சகல பாதுகாப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை எனவும் கூறினார்.அப்படிப்பட்டவர் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது சுத்த அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு வேளை எதிர் கட்சிகளின் வாயை அடைக்க இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றினாரோ என்னவோ.

எதிர்கட்சிகளை அடக்குவதர்காகவா ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு தனிக்குழு அமைத்து இந்த அணு மின் நிலையம் சரியான பாதுகாப்பு வரம்பிற்குள் அமைக்கப்பட்டிருக்கிறதா?இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படுமே ஆனால் அது எந்த அளவில் இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அந்தக் குழுவிற்கு ஆணை இட்டிருக்க வேண்டும்.அந்த அறிக்கையை பொறுத்தே அணு மின் நிலையம் அமையும் என்றும் மக்களுக்கு பதிப்பு ஏற்படும் எந்த ஒரு காரியத்தையும் அரசு செய்யது என்றும் உறுதி அளித்திருந்தால் இந்த உண்ணாவிரதம்,போராட்டம் எல்லாம் நின்றிருக்கும்.அணு மின் நிலையம் அமைப்பதனால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது என்று அறிக்கை வந்தால் அணு மின் நிலையத்தை செயல்படுவதில் எந்தத் தடையும் இருக்க கூடாது.

அரசு இதைச் செய்யாமல்,குறை கூறுபவர்களை திருப்தி படுத்தும் நோக்கோடு செயல் பட்டிருப்பது ஆட்சேபத்திற்குரியது!!


[ மேலும் படிக்க ]

தரிசனம்

வீதி உலாவில் இது என் முதல் உலா.உங்கள் அனைவரையும் சந்திக்கும் பயணத்தை இங்கே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பயணம் எனதாக மட்டும் இல்லாமல் நமதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்கள் கருத்துக்களும் பங்கேற்ப்பும் மிக முக்கிய அம்சமாக விளங்கினால் மட்டுமே இந்த முயற்சி முழுமை அடையும். நானும், நண்பர் ஹரிஷும் மற்றும் விரைவில் எங்களுடன் இந்த உலாவில் இணையப் போகும் பதிவர்களின் சார்பாக உங்கள் ஆதரவையும், ஊக்குவிப்பையும் வேண்டி பதிவை தொடங்குகிறேன்.

முதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஏதேனும் ஆன்மிகம் சம்பந்தமாக பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.(குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும்,கண்டிப்புகளுக்கும் இன்னும் நிறைய காலமும் வாய்ப்பும் இருக்கிறது அல்லவா? :) )..அந்த சமயத்தில் நான் சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றது ஞாபகம் வந்தது.அதை பற்றியே எழுதினால் என்ன என்ற கேள்வியின் விளைவே இந்த பதிவு..
ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் எவ்வளவு பிரசித்தி பெற்றது என்று தெரியாது. இருந்தும் அதை பற்றி எழுத நான் நினைத்தது அந்த கோவிலுடன் தொடர்புடைய நம்பிக்கைகளும், அதை பற்றி சொல்லப்படும் சுவாரஸ்யமான தகவல்களும்,அந்த கோவிலின் சமீபமே ஏற்படுத்தும் தாக்கமும்,அமைதியுமே முக்கிய காரணிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

(மேலே கூரை இல்லாமல் வெட்ட வெளியில் கோவில் அமைந்துள்ளதை இந்த படத்தில் காணலாம் )

வாகனத்தை விட்டு இறங்கியதுமே எனக்கு வியப்பு காத்திருந்தது. கோவில் என்றாலே விண்ணை அளக்கும் கோபுரமும்,பரந்த மண்டபகங்களும் தான் என்றே பார்த்த என் கண்  முன்னே மேற்கூரையே இல்லாமல் திறந்த வெளியில் பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு  இருந்தார் ஆஞ்சநேயர்.ஏழு மலைகளுக்கு அப்பாலும்,காடுகளுக்கு அப்பாலும் எளிதில் தரிசனம கொடுக்காமல் பிகு பண்ணும் கடவுள்களுக்கு மத்தியில் ஆரவாரமே இல்லாமல் இந்த ஆஞ்சநேயர் இருப்பது முதலில் என்னை கவர்ந்தது.

அந்த கோவிலின் சக்தியையும்,மகிமையும் கேட்டபோது  அப்படியே கொஞ்சம் ஏன் இப்படி கோவில் கட்டபடாமல் இருக்கிறது   என்று விசாரித்தேன் அங்கே இன்னும் பல சுவாரஸ்யங்கள்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு கர்ப்பகிரகம் கட்ட முயற்சிக்கும் போதெல்லாம் எதாவது அசம்பாவிதம்,தடங்கல் நடக்குமாம். மேலும் ஆஞ்சநேயரே கோவில் கட்ட நினைத்த  யாரோ ஒருவர் கனவில் தோன்றி தனக்கு கோவில் கட்ட வேண்டாம் என்று கூறியதாக ஐதீகம்.உலகையே காக்கும் தன்னை ஒரு சிறு கோவிலுக்குள் அடக்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தார் போலும்.
(உக்ர ஆஞ்சநேயர் சந்நிதி )
பொதுவாக சிலைகள் இரண்டு வகையான பரிமாணங்களில் காட்சி  அளிக்கும். ஒன்று சாந்த ரூபம், மற்றொன்று உக்ர ரூபம்.இங்கே வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருவுருவம் உக்ர சொரூபியாக காட்சிய அளிக்கிறது.பெயருக்கு ஏற்றார்போல் சனிக் கிழமைகளில் முழு அலங்காரத்தில் ஆஞ்சநேயரை பார்த்தல் சிலருக்கு பயபமே ஏற்படுமாம். முன்காலத்தில் தனியாக இந்த கோவிலை கடக்கவே மக்கள் பயபடுவார்களாம்.

9-10 அடியிலான ஒரே கல்லில் அழகிய நுண் வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த திருவுருவம் பழங்கால சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.இடது கையில் கதை,வலது கை ஆசிர்வதிக்கும் நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன.நின்ற நிலையில் இடையில் ஒரு வாள்,தலைக்கு மேல் வரை சுற்றி நிற்கும் தன் வாலில் மணி,தலையில் அழகிய கிரீடம்,உக்ர சொரூபத்தை குறிக்கும் வகையில் வாயிலிருந்து நீண்ட பல் என்று கம்பீரமாக நிற்கிறார் இந்த ஆஞ்சநேயர்.
(கோவிலை சுற்றியுள்ள குன்றுகளில் ஒன்று )
கோவிலை சுற்றியுள்ள தொடர்ச்சியான சிறு குன்றுகளும் மரங்களும் எழில் கூட்டுகின்றன. இவற்றை எல்லாம் மீறி மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம் இந்த ஊரும், பகுதியும் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிமாக வாழும் இடம்.ராவுத்தநல்லூரில் உள்ள "ராவுத்த" என மருவிய ராவுத்தர் என்ற இஸ்லாமிய பெயரே அதற்கு சான்று கூறும்.தன் இளம்வயதில் சில வருடங்கள் இங்கு வசித்த என் தந்தையும் நான் வலிய கேட்டபோது இந்த பகுதியில் நிலவும் சமய ஒற்றுமையை ஊர்ஜிதம் செய்தார். மதத்தின் பேரில் வன்முறைகள் செய்யும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு விஷயம்  இருப்பது  ஆச்சர்யமாக இருந்தது.
(கோவிலில் உள்ள வெங்கடாசலபதியின் சிலை);
எல்லாவற்றுக்கும் மேலாக கோயில்,மசூதி என்ற வார்த்தைகள் ஒரே வாக்கியத்தில் வந்தாலே  பிரச்சனை என்கிற  நிலையில் மதபேதங்கள் பார்க்காமல் இங்கே குடிகொள்ள முடிவு செய்த ஆஞ்சநேயரை வணங்காமல், அந்த ஆலயத்தின் அமைந்த சிறப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. ராமனை கொண்டு அரசியல் நடக்கும் காலத்தில் அந்த ராமனின் தூதனே இப்படி சமய ஒற்றுமையை வலியுறுத்தும் போது நாம் ஏன் வேற்றுமை இல்லாமல் வாழ கூடாது ?. சமயங்களை மனதிலே மட்டும் வைத்து கொண்டு செயலிலே வேற்றுமை காட்டமால் அன்பு என்ற ஒன்றை மட்டுமே அறமாக கொண்டு வாழ்வோம்.ஒரு வகையில் ஆஞ்சநேயன் படைப்பே ஒரு ஆத்மா மிருகமாக பிறந்தாலும் அன்பையும் அறத்தையும் தன் மார்க்கமாக கொண்டால் தெய்வ நிலைக்கு உயரலாம் என்று உலகிருக்கு அறிவுறுத்தவே என தோன்றுகிறது. அப்படி அன்போடும் அறத்தோடும் அனைவரும் வாழ ஆஞ்சநேயன் அருள் புரியட்டும் என்று வேண்டி இந்த பதிவை முடிக்கிறேன்.
(ஆஞ்சநேயர் படம் சமிபத்தில்)

நன்றி
-விஷ்ணு
[ மேலும் படிக்க ]

ஒரு அறிமுகம்


நண்பர்களே, பொது கருத்துக்களங்களின் முக்கிய நோக்கமே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது தான்.தாய்மொழியில் தான் ஒருவனுடைய சிந்தனைகள் இயல்பாக அமையும்.அதனால்,முழுக்க முழுக்க தமிழிலேயே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வலைப்பூவைத் தொடங்குகிறோம்.தொடங்குகிறோம் என்றால் பன்மை ஆயிற்றே?ஆம்,இந்த தளத்தில் எழுத என் நண்பர்கள் சிலரும் சம்மதித்துள்ளனர்.நாங்கள் எங்கள் கருத்துக்களை தனித்தனி தளங்களில் பதிந்து வருகிறோம்.இங்கு வெளியிடப்படும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்துக்களே. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.இது வாசகர்களுக்கும் பொருந்தும்.எங்களுடைய கருத்துக்களை வாசகர்கள் ஏற்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.இங்கு பதியப்படும் கருத்துக்களுக்கு வாசகர்கள் தங்களின் எதிர்ப்புகளை தாராளமாக காட்டலாம்.

நான் ,( http://dream---life.blogspot.com/ ) இந்த தளத்தில் எனது கருத்துக்களை பதிந்து வருகிறேன்.நண்பர் விஷ்ணுவர்த்தனன், (http://vishnu24.blogspot.com/) , இந்த தளத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிந்து வருகிறார்.இன்னும் இரண்டு நண்பர்களும் எழுதவிருக்கிறார்கள்.அதில் ஒருவர் பெண் எழுத்தாளர்.விரைவில் அவர்களைப் பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிடுகிறேன்.

சரியான இடைவெளியில் இங்கே பதிவுகள் பதியப்படுமேயானால், பலவிதமான பதிவுகளைக் காணலாம். ஆன்மிகம்,அரசியல்,சினிமா,கற்பனை என பலவிதமான பதிவுகளும் காணலாம்.

- ஹரிஷ். 

[ மேலும் படிக்க ]