கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தரிசனம்

வீதி உலாவில் இது என் முதல் உலா.உங்கள் அனைவரையும் சந்திக்கும் பயணத்தை இங்கே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பயணம் எனதாக மட்டும் இல்லாமல் நமதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்கள் கருத்துக்களும் பங்கேற்ப்பும் மிக முக்கிய அம்சமாக விளங்கினால் மட்டுமே இந்த முயற்சி முழுமை அடையும். நானும், நண்பர் ஹரிஷும் மற்றும் விரைவில் எங்களுடன் இந்த உலாவில் இணையப் போகும் பதிவர்களின் சார்பாக உங்கள் ஆதரவையும், ஊக்குவிப்பையும் வேண்டி பதிவை தொடங்குகிறேன்.

முதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஏதேனும் ஆன்மிகம் சம்பந்தமாக பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.(குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும்,கண்டிப்புகளுக்கும் இன்னும் நிறைய காலமும் வாய்ப்பும் இருக்கிறது அல்லவா? :) )..அந்த சமயத்தில் நான் சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றது ஞாபகம் வந்தது.அதை பற்றியே எழுதினால் என்ன என்ற கேள்வியின் விளைவே இந்த பதிவு..
ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் எவ்வளவு பிரசித்தி பெற்றது என்று தெரியாது. இருந்தும் அதை பற்றி எழுத நான் நினைத்தது அந்த கோவிலுடன் தொடர்புடைய நம்பிக்கைகளும், அதை பற்றி சொல்லப்படும் சுவாரஸ்யமான தகவல்களும்,அந்த கோவிலின் சமீபமே ஏற்படுத்தும் தாக்கமும்,அமைதியுமே முக்கிய காரணிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

(மேலே கூரை இல்லாமல் வெட்ட வெளியில் கோவில் அமைந்துள்ளதை இந்த படத்தில் காணலாம் )

வாகனத்தை விட்டு இறங்கியதுமே எனக்கு வியப்பு காத்திருந்தது. கோவில் என்றாலே விண்ணை அளக்கும் கோபுரமும்,பரந்த மண்டபகங்களும் தான் என்றே பார்த்த என் கண்  முன்னே மேற்கூரையே இல்லாமல் திறந்த வெளியில் பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு  இருந்தார் ஆஞ்சநேயர்.ஏழு மலைகளுக்கு அப்பாலும்,காடுகளுக்கு அப்பாலும் எளிதில் தரிசனம கொடுக்காமல் பிகு பண்ணும் கடவுள்களுக்கு மத்தியில் ஆரவாரமே இல்லாமல் இந்த ஆஞ்சநேயர் இருப்பது முதலில் என்னை கவர்ந்தது.

அந்த கோவிலின் சக்தியையும்,மகிமையும் கேட்டபோது  அப்படியே கொஞ்சம் ஏன் இப்படி கோவில் கட்டபடாமல் இருக்கிறது   என்று விசாரித்தேன் அங்கே இன்னும் பல சுவாரஸ்யங்கள்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு கர்ப்பகிரகம் கட்ட முயற்சிக்கும் போதெல்லாம் எதாவது அசம்பாவிதம்,தடங்கல் நடக்குமாம். மேலும் ஆஞ்சநேயரே கோவில் கட்ட நினைத்த  யாரோ ஒருவர் கனவில் தோன்றி தனக்கு கோவில் கட்ட வேண்டாம் என்று கூறியதாக ஐதீகம்.உலகையே காக்கும் தன்னை ஒரு சிறு கோவிலுக்குள் அடக்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தார் போலும்.
(உக்ர ஆஞ்சநேயர் சந்நிதி )
பொதுவாக சிலைகள் இரண்டு வகையான பரிமாணங்களில் காட்சி  அளிக்கும். ஒன்று சாந்த ரூபம், மற்றொன்று உக்ர ரூபம்.இங்கே வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருவுருவம் உக்ர சொரூபியாக காட்சிய அளிக்கிறது.பெயருக்கு ஏற்றார்போல் சனிக் கிழமைகளில் முழு அலங்காரத்தில் ஆஞ்சநேயரை பார்த்தல் சிலருக்கு பயபமே ஏற்படுமாம். முன்காலத்தில் தனியாக இந்த கோவிலை கடக்கவே மக்கள் பயபடுவார்களாம்.

9-10 அடியிலான ஒரே கல்லில் அழகிய நுண் வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த திருவுருவம் பழங்கால சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.இடது கையில் கதை,வலது கை ஆசிர்வதிக்கும் நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன.நின்ற நிலையில் இடையில் ஒரு வாள்,தலைக்கு மேல் வரை சுற்றி நிற்கும் தன் வாலில் மணி,தலையில் அழகிய கிரீடம்,உக்ர சொரூபத்தை குறிக்கும் வகையில் வாயிலிருந்து நீண்ட பல் என்று கம்பீரமாக நிற்கிறார் இந்த ஆஞ்சநேயர்.
(கோவிலை சுற்றியுள்ள குன்றுகளில் ஒன்று )
கோவிலை சுற்றியுள்ள தொடர்ச்சியான சிறு குன்றுகளும் மரங்களும் எழில் கூட்டுகின்றன. இவற்றை எல்லாம் மீறி மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம் இந்த ஊரும், பகுதியும் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிமாக வாழும் இடம்.ராவுத்தநல்லூரில் உள்ள "ராவுத்த" என மருவிய ராவுத்தர் என்ற இஸ்லாமிய பெயரே அதற்கு சான்று கூறும்.தன் இளம்வயதில் சில வருடங்கள் இங்கு வசித்த என் தந்தையும் நான் வலிய கேட்டபோது இந்த பகுதியில் நிலவும் சமய ஒற்றுமையை ஊர்ஜிதம் செய்தார். மதத்தின் பேரில் வன்முறைகள் செய்யும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு விஷயம்  இருப்பது  ஆச்சர்யமாக இருந்தது.
(கோவிலில் உள்ள வெங்கடாசலபதியின் சிலை);
எல்லாவற்றுக்கும் மேலாக கோயில்,மசூதி என்ற வார்த்தைகள் ஒரே வாக்கியத்தில் வந்தாலே  பிரச்சனை என்கிற  நிலையில் மதபேதங்கள் பார்க்காமல் இங்கே குடிகொள்ள முடிவு செய்த ஆஞ்சநேயரை வணங்காமல், அந்த ஆலயத்தின் அமைந்த சிறப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. ராமனை கொண்டு அரசியல் நடக்கும் காலத்தில் அந்த ராமனின் தூதனே இப்படி சமய ஒற்றுமையை வலியுறுத்தும் போது நாம் ஏன் வேற்றுமை இல்லாமல் வாழ கூடாது ?. சமயங்களை மனதிலே மட்டும் வைத்து கொண்டு செயலிலே வேற்றுமை காட்டமால் அன்பு என்ற ஒன்றை மட்டுமே அறமாக கொண்டு வாழ்வோம்.ஒரு வகையில் ஆஞ்சநேயன் படைப்பே ஒரு ஆத்மா மிருகமாக பிறந்தாலும் அன்பையும் அறத்தையும் தன் மார்க்கமாக கொண்டால் தெய்வ நிலைக்கு உயரலாம் என்று உலகிருக்கு அறிவுறுத்தவே என தோன்றுகிறது. அப்படி அன்போடும் அறத்தோடும் அனைவரும் வாழ ஆஞ்சநேயன் அருள் புரியட்டும் என்று வேண்டி இந்த பதிவை முடிக்கிறேன்.
(ஆஞ்சநேயர் படம் சமிபத்தில்)

நன்றி
-விஷ்ணு

17 Responses so far.

 1. Harish.M says:

  முதல் உலா ஆன்மீக உலாவாக அமைந்தது தெய்வச்செயலே.. சிறப்பான பதிவு.. கோவிலைப்பற்றி மட்டுமின்றி ஊரைப்பற்றியும் தகவல் திரட்டியதற்கு பாராட்டுக்கள்.ஆஞ்சநேயர் பற்றிய பதிவிலும் அரசியலை நுழைத்ததற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கோவிலுக்கு கர்ப்பகிரகம் கட்டும்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.நேபால் புட நீலகன்ட் கோவிலுக்கும் இதே போல ஒரு வரலாறு உண்டு.

  மொத்தத்தில் இனிமையான உலா. தொடர்ந்து எழுதவும்!!!!

 2. Kris says:

  //(குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும்,கண்டிப்புகளுக்கும் இன்னும் நிறைய காலமும் வாய்ப்பும் இருக்கிறது அல்லவா? :) )..//
  விளக்கம் தேவை!

  இப்பதிவில்(மட்டும்) கடவுள் நம்பிக்கையை விடுத்தவர்கள் பின்னூட்டமிடாமல் இருக்கலாமா?

 3. all the best.

  (p.s. the first photo is not visible.)

 4. Vishnu says:

  Harish: நன்றி...பதிவு விரும்பத் தக்கதாக இருக்கிறது என்பதை கேட்க மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது...இன்னும் சிறப்பாக சிறப்பாக எழுதி தரமான பதிவுகளை தர எதிர் நோக்கியுள்ளேன்...

 5. Vishnu says:

  kris: குமுறல்.கண்டிப்புகள் என நான் சொல்வது பொதுவாக எனது பதிவு முறையை பற்றி...எனது சொந்த வலைபதிவில் 2 வருடமாக நான் எழுதி வருவது அதை போன்ற பதிவுகளே..மேலும் கலை, இலக்கியம்,பொழுதுபோக்கு சாராத பதிவர்கள் அனைவரும் தத்தமது எண்ணங்களை,அனுபவங்களை இப்படி குமுறல்களாகவும்,கண்டிபுகளாகவுமே எழுதுகின்றனர் என நினைக்கிறேன்.பதிவில் கூறிய அந்த கருத்து பொதுவாக மற்றவர்களை சாட,சமுதாயத்தை கண்டிக்க,அரசியல்வாதிகளை திட்ட இன்னும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற அர்த்தத்தில் எழுதினேன்..

  நீங்கள் சொல்வது சரியே...வேறிய கொள்கைகள்,நம்பிக்கைகள் கொண்டவர்கள் பங்கேற்கும் களமே முழுமையான புரிதலுக்கு வழி வகுக்கும்...மற்றபடி நீங்கள் கடவுள் நம்பிக்கை விடுத்தவர்கள் குறிப்பாக பின்னூட்டமிடாமல் இருக்கலாமா என்று எதற்கு கேட்கிறீர்கள் என்று புரியவில்லை...இருந்தாலும் எந்த நோக்கில் இந்த பதிவை எழுதினேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

  மங்களகரமாக இருக்கட்டுமே என்பதோடு மட்டுமில்லாமல் அந்த கோவிலின் பிற மதநல்லிணக்க கோணங்களும் இந்த பதிவு எழுத காரணங்களாக விளங்கின .. சில நம்பிக்கைகள் பற்றி சொல்ல பட்டிருந்தாலும் கடைசியில் பதிவு சொல்லும் கருத்து மக்கள் அன்பை மதமாக கொண்டு நட்பு பாராட்ட வேண்டும் என்பதே...கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதை ஆமோதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நான் பதிவில் கூறி இருப்பது போல் அனுமன் என்னும் புராண பாத்திரம் மிருக நிலையில் இருந்தாலும் ஒருவன் அறம் மற்றும் அன்பின் வழியாக மனித நிலையை காட்டிலும் மேன்மையான நிலையை அடையலாம் என்ற கருத்தை தாங்கி நிற்ப்பதை மறுக்க முடியாது.கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த செய்தியை அனைவரும் மதிப்பார்கள் என கருதுகிறேன். எனவே இது சமயம் சார்ந்ததோ,கொள்கைகள் சார்ந்த பதிவோ அல்ல,இது அனைவருக்குமான பதிவு..

  கருத்துக்கு நன்றி..எந்த நோக்கில் எழுதினேன் என சொல்ல உங்கள் கேள்வி வாய்ப்பாக அமைந்தது மகிழிச்சி..தொடர்ந்து படிக்கவும்..

 6. Vishnu says:

  Naarayanan: வாழ்த்துகளுக்கு நன்றி.. சில Browser compatibility Issues உள்ளன..Google Chrome-மில் படம் ஒழுங்காக தெரிகிறது...இருந்தாலும் அந்த படத்தை மாற்றி விடுகிறேன்..சுட்டி காட்டியமைக்கு நன்றி...

 7. Harish.M says:

  Naarayanan sir - வாழ்த்துக்களுக்கு நன்றி!!!தொடர்ந்து ஆதரவளியுங்கள் :-)

 8. Kris says:

  @Vishnu: பொதுவாகவே, மத நம்பிக்கையை கடந்தவர்களுக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அதிகம். ஆனால் சமூகம் மதநம்பிக்கை இல்லாதவனைதான் எதோ ஜந்துவாக பார்க்கும். காரணம் நம் சமூகத்தில் ஒரு மனிதன், தன் மத அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை, ஆனால் நாத்திகன் என்று வெளிபடுத்திக்கொள்ள எனக்கு இன்னமும் தயக்கம் உள்ளது (ஒருகாலத்தில் கடவுள் இல்லை-ன்னு எழுதியிருந்தத பார்த்து நானும் சிரித்து இருக்கிறேன்). உலகத்தின் எந்த மூலையிலும் மத கலவரம்/வன்முறை/துவேசம், மத சார்பு அதிகம் உள்ள மனிதர்களுக்கு இடையில்மட்டும்தான் நடக்கும்.

  இந்த பதிவில் நான் எழுதுவது, வெறும் வாதத்துக்கு எழுதுவதாக யாரும் எண்ணக்கூடாது என்பதாலேயே முதலில் கேட்டேன்.

 9. Harish.M says:

  Kris -

  //ஆனால் நாத்திகன் என்று வெளிபடுத்திக்கொள்ள எனக்கு இன்னமும் தயக்கம் உள்ளது //

  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. இந்த 'பகுத்திறவு' மிகுந்த 'திராவிட' கட்சிகளின் ஆட்சியிலேயே இப்படி சொல்றீங்களே :D ."அம்பாள் எந்த காலத்துல டா பேசி இருக்கா"னு நம்ம தமிழ் சினிமாவிலே தான் வசனம் வந்தது. நாத்திகர்களையோ நாத்திகத்தையோ பெரும்பாலனவர்கள் எதிர்க்கவில்லை. நாத்திகம் என்ற போர்வில் இந்துக்களை மட்டுமே அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள்.விமர்சனம் செய்தால் கூட தவறில்லை வசை பாடுகிறார்கள்.மத சார்பு அதிகம் உள்ள மனிதர்களால் கலவரங்கள் நடப்பதில்லை தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் சொல்வதைப்போல மத நெறி மத வெறியாக மாறும் போது தான் இத்தகைய கலவரங்கள் நடக்கின்றன.

  இது ஜனநாயக நாடு.இங்கு மக்கள் அவரவர் விருப்பப் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.கடவுளே இல்லை என்று கூட கூறலாம்.ஆகையால் தயங்காமல் தாங்கள் ஒரு நாத்திகவாதி என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ளலாம்

 10. Kris says:

  இங்கு நான் எழுதுவதன் நோக்கம் நம்மை அடுத்த தளத்துக்கு எடுத்துசெல்வதற்கான ஒரு சிறு முயற்சியே அன்றி எவரையும் புண்படுத்துவதற்காக அல்ல.

  பொதுவாக ஆன்மீகவாதிகள் இறைநம்பிக்கையின் நன்மைகளாக பட்டியல் இடுவது

  ௧. ஒழுக்கத்தை போதிக்கிறது
  ௨. மன அமைதியை ஏற்படுத்துகிறது

  இது மட்டும்தான், இதனை வேறு வழிகளில் பெறமுடியாதா என்ற கேள்வியின் விடை: “முடியும்” - என்பது ஒருபுறம் இருக்க,

  முக்கியமாக,

  // சில நம்பிக்கைகள் பற்றி சொல்ல பட்டிருந்தாலும் //

  மதங்கள் நம்மீது திணிக்கும் பிற்போக்குதனமான கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் நாம் பொதுவாக கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறோம் என்பதே என் கவலை.

 11. Kris says:

  //மக்கள் அன்பை மதமாக கொண்டு நட்பு பாராட்ட வேண்டும் என்பதே//
  நோக்கம் சரியாக இருந்தாலும் முக்கியமாக கவனிக்க வேண்டியது இவ்வாறான மத நல்லிணக்க கோவில்கள்/(பிற மத ஆலயங்கள்) விதிவிலக்குகலாக சிலவே உள்ளன.

  பெரும்பாலான இடங்களில் கோவில்கள்/(பிற மத ஆலயங்கள்) பிரிவினையை வளர்த்த/வளர்க்கும் சக்திகளாகவே உள்ளன. (எனது குல தெய்வ கோவிலில் வேறு சாதி மனிதர் நுழையமுடியாது, நுழைந்ததாலும் விழா எடுக்க முடியாது நம்மில் பெரும்பாலானோருக்கு அப்படித்தான்) எனவே கடவுளை வைத்துக்கொண்டு சகமனிதரின் மீது பூரண அன்பை செலுத்துவது இயலாத காரியம்.ஒரு வாதத்திற்கு படித்தவர்களால் முடியும் என்றாலும் அது எல்லோராலும் முடியுமா? இன்றைக்கு மத கலவரங்களை தூண்டும் சக்திகளின் தலைமைகள் படிக்காதவர்களா?

  ஞாயிறன்று கிறிஸ்துவர்கள் ஊர்வலம் செல்வதும், விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் செல்வதும் இன்னபிற ஆலய விழாக்களும் மத நல்லிணக்கத்தை பரப்புகின்றதா? (நான் கண்ட வரை: பேரணி குழுவில் உள்ள மனிதர்களின் ஆர்பரிப்புகள், தம சமூகத்தின் பலத்தை நிரூபிப்பதற்கான களமாகவே பயன்படுத்தபடுகிறது)

 12. Kris says:

  //அன்பின் வழியாக மனித நிலையை காட்டிலும் மேன்மையான நிலையை அடையலாம் //

  இந்த “மேன்மை” நிலையெல்லாம் ஒன்றும் கிடையாது. அன்பின்வழியாக நீங்கள் அடையும் நிலைதான் “மனிதன்” என்னும் நிலை. ஆரமபத்தில் அப்படியிருக்க தவறினோம் பிறகு அதுவே வழக்கமாகிவிட்டதால் “மனிதன்” ஆக வாழ்வதை “மனிதனுக்கு மேற்பட்ட ஒரு நிலை” என்று நம் வசதிக்கு மாற்றி விட்டோம்.

  தீர்க்கமாக யோசித்தால் இந்த மனித நிலையை அடைய கடவுள் என்ற ஒரு ஊடகம் தேவையே இல்லை,

  நம் முன்னோர்கள் உருவாகிய புராணங்கள் அவர்கள் தங்கள் சமகாலத்தில் தரிசித்த சமூக நிகழ்வுகள் (அன்பு, நட்பு, காதல், வீரம், துரோகம் இன்னபிற) மற்றும் கலாசாரத்தின் மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளே அன்றி வேறில்லை என்பது என் எண்ணம. இதற்கு எளிய உதாரணம் இன்றைய கலைத்துறை. திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் 1960களையும் பாருங்கள் இன்றைய 2011 யும் பாருங்கள். கலாசார மாற்றங்கள் தெளிவுபடும்.

  நிற்க, இங்கு நான் சொல்ல விழைவது- புராணங்களில் நல்லவிசயங்களும் உள்ளன கெட்டவையும் உள்ளன. கெட்டவை சமுதாயத்தால் (அனைத்தும் அல்ல, சில விஷயங்கள் மட்டும்) புரம் தள்ளபட்டுள்ளன. ஆனால் இந்த மதத்தை பரப்பும் ஊடகங்கள் புராணங்களின் நல்ல விசயங்களை மட்டும் உயர்த்தி காண்பித்து அவை மட்டுமே அப்ப்புனித நூல்களின் சாரம் என்ற சப்பைக்கட்டுடன் நம்மை மயக்க நிலையில் வைக்கின்றன.

  ஒரு வரியில் சொன்னால் “எதையும் கேள்விகேள்” என்ற அறிவியலின் கோட்பாட்டுக்கெதிராக, “நான் சொல்வதை கேள்விகேட்காமல் நம்பு” நல்லது நடக்கும் என்று உத்தரவிடுகின்றன.

 13. Kris says:

  படித்தவர்களாகிய நாம் இவையனைத்தையும் சீர்தூக்கி பார்த்து போலிகளின் முகத்திரையை கிழித்து “மனிதம்” வளர்க்க முயல்வோம் மதங்களை அல்ல.

  குறிப்பு:ஒட்டுமொத்த சமுதாயமும் ஒரேநாளில் மனிதம் வளர்க்க தயாராகிவிடும் என்பதுபோன்ற பகல் கனவு எனக்கில்லை. ஆனால் அறிவியலின் துணைகொண்டு படிப்படியாக சமூகம் மாறும் மாற வேண்டும் என்பதே என் அவா! (புளிய மரத்தில் பேய் இருக்கும் என்ற நம் பாட்டிகதை மின்சாரம் வந்ததும் மலை ஏறியதைபோல)

 14. Harish.M says:

  அருட்பெருஞ்சோதி வள்ளலார்,ஸ்ரீ ராகவேந்திரர்,பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்,ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்ததற்கு பல சான்றுகள் உள்ளன.அவர்கள் பல அற்புத செயல்கள் புரிந்ததையும் வரலாறு கூறுகிறது.நிம்மதி,அமைதி,ஒழுக்கம் இவை மதத்தின் பேராலோ அல்லது இறைவனின் பெயராலோ மட்டும் தான் பெற முடியுமென்பதில்லை என்கிறீர்கள்.இறைவனின் பெயரால் ஒருவனை ஒழுக்கப்படுத்துதல் எந்த விதத்திலும் தவறென்று நான் நினைக்கவில்லை.பெரும்பாலான இறை மருப்பாளர்களிடம் இந்த குணாதிசயத்தைக் காண்கிறேன்.இறை நம்பிக்கை உடையவர்களை விட தாம் தான் முற்போக்கு சிந்தனையாளர் என்பது போன்ற ஒரு என்னத்தைக் காண்கிறேன்.இதுவே ஒரு மூடநம்பிக்கை தான்.

  இது ஒரு சாதாரண விஷயம்.ஒரு திரைப்படம் வெளியாகிறது.சிலர் அதை ரசிப்பார்கள் சிலர் அதையே மிகக் கேவலமான படமென்றும் கூறுவார்கள்.நானறிந்த வரையில் எந்த ஒரு திரைப்படமும் அனைவரையும் திருப்தி படுத்தியதாக சரித்தரமே இல்லை.அது போல தான் இறை நம்பிக்கையும்.இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க எப்படி போதுமான ஆதாரங்கள் இருப்பதில்லையோ அதே போலவே மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி இல்லை என்றும் நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லை.

  மதத்தின் பெயரால் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்,கலவரங்கள் போன்றவை வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியவே,அதனை ஒழிக்க நம்மால் ஆனா முயற்சிகளையும் செய்யத்தான் வேண்டும்.இறைவன் இருக்கிறானா இல்லையா என்கிற வாதத்துக்கு விடை - அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததே

 15. Kris says:

  @Harish.M

  // 'பகுத்திறவு' மிகுந்த 'திராவிட' கட்சிகளின் ஆட்சி//
  உங்களுக்கே தெரியும் அவங்களோட பகுத்தறிவு எந்த அளவு-ன்னு. இன்றைக்கு எல்லா கட்சிகளுமே பெயரளவில்தான் திராவிடம் பேசுது. திராவிடம்-னு பெயர் ஆரம்பிக்கரதால வேற வழியில்லாம தேவைப்படும்போது பெரியார் படத்தை போடுது. பெரியார் சீடர்கள்ள வயசுல நாத்திகம் பேசிட்டு வீட்டுல ஒருத்தரையும் திருத்தாதவங்கள, வயசான பிறகு எல்லா மூட நம்பிக்கையும் உள்ளவங்கள உங்களுக்கு நல்லாவே தெரியும். (தி.க. வுல புற்றுநோயால சாகபோகும்போதுகூட தனக்கு எந்த பயமோ கடவுள் பக்தியோ ஏற்படல-னு மரணவாக்குமூலம் கொடுத்துட்டு இறந்த பெண் சீடர்களும் வரலாற்றுல இருக்காங்க)

  // நாத்திகம் என்ற போர்வில் இந்துக்களை மட்டுமே அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள்.விமர்சனம் செய்தால் கூட தவறில்லை வசை பாடுகிறார்கள்.மத சார்பு அதிகம் உள்ள மனிதர்களால் கலவரங்கள் நடப்பதில்லை தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் சொல்வதைப்போல மத நெறி மத வெறியாக மாறும் போது தான் இத்தகைய கலவரங்கள் நடக்கின்றன.//

  இன்றைய சூழலில் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக பண்ணும சூழ்ச்சிகளை நீங்கள் வசை என்று எடுத்துக்கொள்ளவேண்டாம், உண்மையில் அத்தகைய பச்சூந்திகளின் நடிப்பை பார்த்து தாராளமாக நீங்கள் நகைக்கலாம்.

  ஒருவேளை பொதுவான மனிதர்கள் அப்படி வசை பாடினால் அவர்களுக்காக பரிதாபபடுங்கள். உண்மையிலேயே அவர்களுடைய கருத்தில் நியாயம் இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் என்ன நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.

 16. Kris says:

  //மத நெறி மத வெறியாக மாறும் போது//

  மத சார்புமட்டும் இருப்பவர்கள், பெரும்பாலான நடுத்தரவர்க்கம் மதவெறியுடன் அலைவதில்லை. மதச்சார்பு அதிகமாகும்போது அதற்கு பொருத்தமான மதத்தலைவர்களின் தூண்டுதலினால் மதவெறி வர வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் அறியாமையே மதவெறியின் முக்கியகாரணம். மேலும்,
  கலவரங்கள் மட்டும் இதன் தீய விளைவு அல்ல, ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சிக்கே இது ஒரு பின்னடைவாக உள்ளது.

  //இது ஜனநாயக நாடு.இங்கு மக்கள் அவரவர் விருப்பப் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்//

  அதெல்லாம் சும்மா, அரசியலமைப்பு சட்டம் =எட்டு சுரைக்காய். அரசியல் கட்சிகள் என்னதான் மதநல்லிணக்க / சிறுபான்மை ஆதரவு வேஷம் போட்டாலும் அது வெளியே பெயருக்குத்தான். உண்மையில் ஒவ்வொரு பகுதியிலும் பெரும்பான்மையான மக்களின் ஒட்டை எதிபார்த்து பிறவகுப்பினருக்குக்கு நிகழும் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்.


  // தயங்காமல் தாங்கள் ஒரு நாத்திகவாதி என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ளலாம்//

  லாம். ஆனால் இதை நான் ஒரு அரபு நாட்டில் செய்யமுடியாது. மேலும் பணி சூழலில் எனது இத்தகைய வெளிப்பாடுகள் வெகு சில சமயங்களில் விவாதத்திற்கு இட்டு செல்கின்றன. என் எதிராளியின் வாதம் “நீ எந்த மதத்தை வேண்டுமானாலும் சார்ந்திரு ஆனால் கடவுளை நம்பு” இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும் ஆனால் இத்தகைய விவாதத்தை பணிசூழலில் செய்ய விரும்பாமல் தயங்குகிறேன். மற்றபடி தைரியம் இல்லாமல் இல்லை. (அதே நேரத்தில் ஒருவர் திலகமிட்டலோ, சிலுவை அணிந்தாலோ, குல்லா வைத்தாலோ, தாடி வளரத்தாலோ யாரும் ஏன் என்று கேட்பதில்லை அதுதான் நான் சொல்ல வந்தது) 

 17. Kris says:

  //இறைவனின் பெயரால் ஒருவனை ஒழுக்கப்படுத்துதல் எந்த விதத்திலும் தவறென்று நான் நினைக்கவில்லை.//

  ௧. ”இறைவனின் பெயரால் ஒருவனை ஒழுக்கப்படுத்துதல்”
  இன் அவசியம் என்ன? ஒரு குழந்தையை பயமுறுத்துவது போலவா? இன்றைய சூழலுக்கு அது தேவையில்லை மேலும் இறைவனின் பெயரை சொல்பவன் ஒழுக்கம்/ஒழுங்கு இல்லை. மேலும் மதம் ஒழுக்கத்தை போதிக்கவேயில்லை என்று என்னால் விவாதிக்கமுடியும்.

  //பெரும்பாலான இறை மருப்பாளர்களிடம் இந்த குணாதிசயத்தைக் காண்கிறேன்.இறை நம்பிக்கை உடையவர்களை விட தாம் தான் முற்போக்கு சிந்தனையாளர் என்பது போன்ற ஒரு என்னத்தைக் காண்கிறேன்.இதுவே ஒரு மூடநம்பிக்கை தான்.//

  “இதுவே ஒரு மூடநம்பிக்கை தான்”-மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம், பிற மூட நம்பிக்கைகளை நிரூபிப்பது போல உங்களால் இதை நிரூபிக்க முடியுமா? இது முற்போககா பிற்போக்கா என்பதை விட இன்றைய கால சூழலுக்கு ஏற்றதா என்பதே முக்கியம். இது பிபோக்குதனமானதாகவே இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!

  //மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி இல்லை என்றும் நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லை//

  “மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி” யை வணங்கினால்/வணங்காவிட்டால் எதுவும் மாறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. புரிந்துகொண்டால் மாற்றலாம் என்பது அறிவியல்.

  மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி இல்லை என்று அறிவியல் கூறவில்லை அது எப்போதும் அந்த சக்தியை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது, படிப்படியாக முன்னேற்றமும் அடைந்துள்ளது.எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும்படியும் விளக்குகிறது. ஆனால் மதம் அதனை கடவுள் என புனைவாக காட்டுகிறது. எல்லாராலும் புரிந்துகொள்ளமுடியாது என்கிறது. அறிவியல் நேற்று கண்டுபிடித்ததை இன்று மிஞ்சுகிறது மாற்றுகிறது. மத நூல்களில் எதுவும் மாறுவதில்லை தான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்கிறது. நாம் தான் காலத்திற்கேற்ப, அறிவியலுக்கேறப்ப மதம் சொன்னபடி இல்லாமல் மாறிக்கொள்கிறோம்.

  சுருங்க சொன்னால் அறிவியல் வளர்கிறது மதம் தேய்கிறது இது பிற்போக்கு/முற்போக்கு என்பதல்ல விஷயம், எல்லாராலும் உணரப்படக்கூடிய, என்னாலும் உணரப்பட்ட, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட விசயங்களை நான் ஏற்கிறேன்.