கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

அழிவுக்கு அறிகுறிசென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பலரும் விமர்சிக்கிறார்கள்.ஆனால் இது தனது அரசாங்கத்துக்கு அவ பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று முதல்வரே முனைந்து எடுத்த முடிவு போல தோன்றுகிறது.இல்லையெனில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்வாரா?இந்த இடமாற்றத்தை விமர்சிப்பவர்களின் வாயடைக்க இந்த கட்டடத்தை,சிறப்பு வசதிகள் கொண்ட குழந்தைகள் மருத்துவமனை அமைக்க பயன்படுத்துவோம் என்று அறிவித்து விட்டார்.

நேற்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் விவாதிப்பதைப் பார்த்தேன்.அவரால் சரளமாகப் பேசக் கூட முடியவில்லை.அவரது பேச்சாற்றலைக் குறை சொல்லவில்லை,இந்த விஷயத்தில் அம்மையாரின் இந்த உத்தரவைப் பலமாக ஆதரிக்கக்கூட முடியாமல் தினரியதைத்தான் குறிப்பிட்டேன். இந்த உத்தரவுக்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நூலகம் இருக்கக் கூடாது. இந்த நூலகம் வரலாற்றுப் புகழ் பெற்ற நூலகமாக மாறினால் அதைத் திறந்தவர் கலைஞர் என்பதையும் வரலாறு சொல்லும் . அதைத் தடுக்க ஒரே வழி 'இந்த' நூலகத்தையே அகற்றி விடுவது தான்.

 "நாங்கள் நூலகத்தை ஒரே அடியாக மூடிவிடவில்லை இடமாற்றம் தான் செய்திருக்கிறோம்,குழந்தைகள் மருத்துவமனை வருவதை ஏன் எதிர்க்கிறீர்கள்? அதில் என்ன தவறு?" என்று ஆளும் கட்சியினர் சிலரும்,அரசை ஆதரிக்கும் சிலரும் கேட்கிறார்கள். குழந்தைகள் மருத்துவமனை வருவதை யாரும் எதிர்க்கவில்லை.ஏன் மருத்துவமனையைக் கட்டச் சென்னையில் வேறு இடமே இல்லையா?தமிழகத்தில் வேறு எங்கும் இந்த மருத்துவமனையைக் கட்ட முடியாதா?கலைஞர் திறந்து வைத்த நூலகத்தைத் தான் மருத்துவமனையாக மாற்ற வேண்டுமா?

சரி சுமார் 200 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்டக் கட்டடத்தை வீணாக்கக்கூடாது என்று மருத்துவமனைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்.மருத்துவமனைக் கட்ட இந்தக் கட்டட அமைப்புச் சரியாக இருக்குமா?அதற்கு மேலும் பல நூறு கோடிகள் செலவாகாதா?அப்படிச் செலவு செய்தால் கூட எந்த பாதிப்புமின்றி மருத்துவமனைக் கட்டிவிட முடியுமா?ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.இவர்கள் சொல்கிறபடி இடமாற்றம் செய்கிரார்களென்றே  வைத்துக்கொள்ளலாம். அத்தனைப் புத்தகங்களும் தவறாமல் இடமாற்றம் செய்யப்படுமா?இந்த நூலகத்தில் இருந்ததைப் போல அவை தலைப்புக்கேற்றவாறு ஒழுங்கு படுத்தி வைக்கப்படுமா? இவை அத்தனையும் செய்ய காலதாமதமாகாதா?இதனால் இந்த நூலகத்தை வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்குத் தான் பாதிப்பு.

நூலகம் என்பது ஏதோ பழைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் அருங்காட்சியகம் அல்ல.கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பல தகவல்களைப் பல்வேறு புத்தகங்களிலிருந்தும் திரட்ட நூலகமே சிறந்த இடம். ஓரளவுக்கு அனைத்துத் தனியார் கல்லூரிகளிலும் ஒரு சிறப்பான நூலகம் இருக்குமென்றே வைத்துக் கொண்டாலும் கூட,அனைத்துப் பள்ளி,கல்லூரிகளிலும் சிறப்பான நூலகங்கள் பரமாரிக்கப் படுவதில்லை.மாணவர்களுக்கென்றே இல்லை,படிக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் நூலகங்கள் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். என் தனிப்பட்டக் கருத்து என்னவென்றால் இன்னும் பல நூலகங்கள் அமைக்கப் பட வேண்டும்.ஒரு கன்னிமாரா மட்டுமே போதாது.அப்படி இருக்க, இருக்கிற நூலகத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக இடமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்க செயல்.

முதலில் தலைமைச் செயலகத்தை மாற்றினார்கள்.அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.கட்டடம் முழுமையாகக் கட்டப்படாத நிலையில் அதைத் தலைமைச் செயலகமாக முந்தைய ஆட்சியில் மாற்றியது தவறு தான்.அந்தக் கட்டடத்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைக் கட்டப் பயன்படுத்துவோம் என முதல்வர் அறிவித்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்குவது சாத்தியம் தானா என்பது கேள்விக்குறி தான்.அதற்கு மிக அருகில் ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதும் நினைவிருக்கலாம்.அப்படி இருக்க அந்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனயேச் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.ஆனாலும் இவை சமாளிக்ககூடியப் பிரச்சினைகள் தான் என்று வைத்துக் கொள்வோம்.

இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டக் கட்டடம் அதனால் முதல்வர் தலைமைச்செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றி விட்டார் என்று விமர்சித்தவர்கள் பட்டியலைச் சேர்ந்தவனல்ல நான்.அவரின் அந்த நடவடிக்கைக்கு அரசு தரப்பில் கூறப்பட்டக் காரணங்களை ஆராய்ந்து அரசின் முடிவுக்கு ஆதரவு தான் தெரிவித்தேன்.ஆனால் தொடர்ச்சியாக இது போன்ற நடவடிக்கைகள்,சரியான காரணமில்லாமல் எடுக்கப்படுவது கண்டனத்திற்குரியது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைத் தூசி தட்டி சில மாறுதல்களைச் செய்து வேறு பெயரில் அமல்படுத்துகிரார்கள்.கலைஞர் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி அளித்து அரசின் கஜானாவைக் காலி செய்து விட்டார் என்று சிலர் கேலிப் பேசினர்.அந்தத் திட்டம் நிறுத்தப் பட்டது. அதற்குப் பதில் 'மக்களின் பொருளாதாரத்தரம் உயர்வதற்காக" மடிக் கணினி,மின்னம்மி,மின்விசிறி இத்யாதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இப்படியே கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது அனைத்தையும் மாற்ற வேண்டுமென்று முதல்வர் நினைத்தால்,பிறகு அவருக்கு இப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."என் மனைவியைக் கலைஞர் ஆட்சியில் கட்டினேன்,இப்போது அம்மா ஆட்சி வந்து விட்டது அதனால் மாற்றி விடுங்கள்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் படலாம்.(இந்தக் கோரிக்கைச் சமூக வலைப்பின்னல்களிலிருந்துச் சுடப்பட்டது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை மாற்றும் இந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் ரத்து செய்யும் என்று தான் நினைக்கிறேன்.

தெரிந்தோ தெரியாமலோ கலைஞர் அவர்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்து வைத்தார்.அவரே எப்போதோ ஒருமுறை தான் இது போல ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறார்.அதையும் இந்த அம்மையார் கெடுத்து விடுகிறார்.முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கைகள்,அமல்படுத்தப்பட்ட நல்ல சட்டங்களை ரத்து செய்வதென்பது தமிழகத்துக்கு ஒரு சாபக்கேடு.கலைஞரின் ஆட்சியில் திறக்கப்பட்ட நூலகமாக இருந்தால் என்ன? அதை இடமாற்றம் செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் முதல்வர் அவர்கள்? இது போன்ற நடவடிக்கைகள்,இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.இது போன்ற நடவடிக்கைகள் தொடருமென்றால் அது அழிவுக்கு அறிகுறி.

4 Responses so far.

 1. JAGAN says:

  இப்படியே போனால் ஒரு நாள் முந்தய ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் அனைத்தும் குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரமாக உலக தரத்தில் அமைக்கபடும் என்று கூட அறிவிப்பு வரலாம்

 2. Anonymous says:

  Gokul
  Good one daa...!!!

 3. Anonymous says:

  Gokul
  Good one daa...!!!

 4. Anonymous says:

  Feel like Lady Hitler ruling Tamilnadu....