கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

புத்தக கண்காட்சி

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
பொருள்:அறிவுசெரிந்த நூல்களை படித்தரிந்தவர்களே மனிதர்கள் எனப்படுவார்கள். எஞ்சியவர்கள் காட்டில் வாழும் மிருகங்கள் போன்றவர்கள் என்று திருவள்ளுவர் அறிவார்ந்த நூல்கள் படிப்பதின் முக்கியத்துவத்தை சொல்கிறார்.இன்றைய காலகட்டத்தில் அறிவு சேர்க்கும் நூல்கள் எத்தனை வெளி வருகிறது என்பது வேறு விஷயம் ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் மிக முக்கியமானது . அதுவும் தமிழ் வாசிப்பு இன்றைய ஆங்கில மொழி ஆதிக்க சமுதாயத்தில் இன்றி அமையாதது.வேறெப்படி நம் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு,தொன்மை, இலக்கியங்கள்,தற்போதைய நடப்புகளை தெரிந்து கொள்வது?

கதை, நாவல், சுயசரிதை,தத்துவம்,ஆன்மிகம்,இலக்கியங்கள்,மொழியியல் நூற்கள் என எந்த புத்தகமானாலும் தவறில்லை. நாம் படிக்கிறோமா இல்லையா,வசிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதே முக்கியம்.

அப்படி படிக்க நினைப்பவர்கள் ஆங்கில புத்தகங்கள் படிப்போராயின் கவலை இல்லை.பெரும்பாலான புகழ்பெற்ற ஆங்கில புத்தகங்கள் மின் வடிவில் கிடைக்கிறது. அதுவும் இல்லை என்றால் பேப்பர்பேக் என மலிவு விலையில் கிடைக்கிறது. ஆனால் அப்படியில்லாமல் ஆங்கிலம் அல்லாத தமிழ் போன்ற வட்டார மொழி படிபபாளர்களின் நிலை மோசம்.தரமான புத்தகங்கள் மின் வடிவில் கிடைப்பதில்லை. மட்டுமில்லாமல் புத்தகங்களின் விலையும் அதிகமாக இருக்கின்றன.பாக்கெட் நாவல்களோ மற்ற நாவல்களோ என்றால் மலிவு விலையில் கிடைக்கும் ஆனால் தரமான புத்தகங்கள் ஒரு நடுத்தர வர்கத்திணனின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

இப்படி பட்ட நாவல்களோ, புத்தகங்களோ 5,6 பகுதிகள் கொண்டதாகவோ அல்லது தலையணை அளவு உள்ளதாகவோ தான் பெரும்பாலும் இருக்கின்றன .இதையும் மீறி ஒரு புத்தகத்தை வாங்க முற்பட்டால் அது அவ்வளவு சீக்கிரம் கிடைப்பது இல்லை. அதன் பதிப்பு எப்போது நிறுத்தப்பட்டதோ என யாருக்கு தெரியும்? கிளாசிக் எனப்படும் தற்கால காவியங்கள் பல கிடைப்பதே அரிது. இந்த எல்லா பிரச்சனைகளையும் போக்கும் விதமாக பல சிக்கல்களுக்கு தீர்வாக இருப்பது தான் வருடா வருடம் நடைபெறும் புத்தக கண்காட்சி.

இது சென்னையில் ஆண்டுதோறும் புத்தாண்டு மற்றும் பொங்கல் சமயத்தில் நடத்தப்படுகிறது .இங்கே வாங்கவிரும்பும் அறிய புத்தகங்கள்,தள்ளுபடி விலையில் கிடைகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே கேள்விப் பட்டிருந்தாலும் இந்த வருடம் தான் புத்தக கண்காட்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்ற எனக்கு மிக வியப்பாக இருந்தது.புத்தகங்கள் அடங்கிய கடலில் விழுந்துவிட்ட ஒரு உணர்வு.கடலின் நீளம் போல் புத்தக அங்காடிகளின் நீளமும்,வரிசையும் நடக்க நடக்க விரிந்து கொண்டே இருந்தது என்றால் அது மிகையாகது.

பொதுவாகவே லேண்ட்மார்க்கில் சில வரிசைகளிலிருந்தே புத்தகங்கள் தேர்வு செய்ய குழம்பும் நான் இங்கே மூச்சடைத்தே போய்விட்டேன்.10 வரிசைகள். வரிசைக்கு 10,12 பதிப்பகங்களின் கடைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட அங்காடிகள்.ஒவ்வொரு அங்காடிகளிலும் அரை மணி நேரம் என்றால் கூட எல்லா அங்காடிகளையும் பார்க்க நாட்கணக்கில் ஆகும்.

இப்படி ஆயிரகணக்கான புத்தகங்களில் இருந்து ஒரு சிலவற்றை எடுப்பது என் போன்றோருக்கு இயலாத காரியம்.இது ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு மிக சிறந்த அழகியை தேர்ந்தெடுத்து அவர்களில் யார் அழகானவர் என்று கேட்பது போன்றதாகும். கடினமான,இக்கட்டான ஒரு பணி. ஒவ்வொரு அங்காடியிலும் எதாவது புத்தகத்தை ஏதோ காரணத்திற்காக வேண்டாம் என்று வைத்து விட்டு வருவது மனதை சஞ்சல பட வைத்தது.அப்படி வைத்ததில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம்,உறுபசி மற்றும் சாண்டில்யனின் கடல் புறா குறிபிட தகுந்தன.எல்லாவற்றையும் விட பாலகுமாரின் உடையார் புத்தகத்தை வாங்காமல் வந்தது வருத்தமாக இருந்தது.

புத்தகங்களின் உள்ள கருத்துக்கள் விலை மதிப்பற்றவைகளாக இருந்தாலும் அந்த புத்தகங்களுக்கு விலை இருந்தே தீருகிறது.அது புத்தகத்தின் கருவுக்கு ஒப்பிட்டால் குறைந்ததே என்றாலும் முன்பே சொன்னது போல் ஒரு நடுத்தர வர்கத்திணனின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. ஆம், மேற்கூறிய புத்தகங்களை வாங்காமல் வந்தது விலை காரணமாகவே. ஒரு புத்தகத்தை வாங்க 1200 ரூபாய் செலவழிக்கும் அளவு பெரும்பாலானோர் நிலை இல்லை,நானும் அப்படியே.அதனால் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களை மட்டுமே வாங்கி கொண்டு வந்தேன்.கண்ணதாசனின் வன வாசம்,ஜெயமோகனின் கொற்றவை, உலோகம், ஜெ.கிருஷ்ண மூர்த்தியின் சில நூல்கள், திருக்குறள் உரை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.

மேலும் இன்னொருமுறை செல்லவும் திட்டமிட்டுள்ளேன் ஒரு தமிழ் அகராதி, மேற்கூறிய வாங்காமல் வந்த புத்தகங்களில் சில மற்றும் சில எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட(நாஞ்சில் நாடன் ,எஸ்.ராமகிருஷ்ணன்,தமிழின் அவசியம் படிக்க வேண்டிய 100 புத்தகங்கள்) நூல்கள் சிலவும் வாங்கவும்,சென்ற முறை பார்க்காமல் விட்டு போன அங்காடிகள் பலவற்றை பார்க்கவும் எண்ணியுள்ளேன் .

இந்த முறை சென்றபோது ஒரு விஷயத்தை கவனித்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.நான் செலவிட்ட 3 மணி நேரத்திலும்,சென்ற அங்காடிகள் அனைத்திலும் ஒரே ஒரு புத்தகம் மட்டும் ஆக்சிஜன் போல் நீங்காமல் இடம்பெற்றிருந்தது .அது கல்கியின் பொன்னியின் செல்வன்.50,60 வருடங்களுக்கு முன்னால் எழுதபட்டாலும் இன்றும் விட்டிலை ஈர்க்கும் விளக்காக இந்நூல் விளங்குவது ஒரு ஆச்சரியம். ஒருவேளை கிளாசிக் என்பது இப்படி எல்லா காலங்களிலும் எல்லா மக்களாலும் விரும்பப்பட்டு காலத்தால் அழியாததோ என கேட்க தோன்றியது. ஆழிக்கு அழிவு வந்தாலும் இதை போன்ற காவியங்களுக்கு அழிவு வராது போலும்.

புத்தகங்கள் என்பது ஒரு தனி உலகம் அதை காணாதோர் நிச்சயம் முழுமை பெற்றவர்களாக இருப்பது கடினம்.படிக்காதவர்கள் ஏதோ ஒரு பரிமாணத்தை   காண தவறுகிறார்கள்,எதையோ இழக்கிறார்கள் என்பது திண்ணம்.

ஆகவேஅனைவரும் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய நிகழ்வாக புத்தக கண்காட்சியை நினைக்கிறேன்.தினமும் மாலையில் வாசகர் எழுத்தாளர் சந்திப்புகளும் நடப்பதாக கேள்விபட்டேன். பிரபல எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பலர் வருவதாக தெரிகிறது.தமிழினி படிப்பகத்தில் நான் கூட இயக்குனர் ராதா மோகனை பார்த்தேன்.ஆனால் வெளியே வந்த உடன் தான் நண்பன் சொல்லி அது அவர் என்பது தெரிந்தது.சரி விஷயத்துக்கு வருவோம்,நீங்கள் செல்ல நேர்ந்தால் பார்க்க வேண்டிய முக்கியமான அங்காடிகள் கிழக்கு,தமிழினி, உயிர்மை, வானதி, கிருஷ்ணமூர்த்தி பௌண்டேஷன் இந்தியா(குறைந்த விலையில் கிருஷ்ணமுர்த்தியின் தத்துவ உரைகளும்,புத்தகங்களும் கிடைகின்றன ) ஆகியன.

புத்தக கண்காட்சி வரும் செவ்வாய் சனவரி 17 வரை,பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் நடக்கிறது.வார விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும்,மற்ற நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடக்கும்.


அங்காடிகள் விவரம் இங்கே. அங்காடிகளின் வரைபடம் கீழே:

One Response so far.

 1. Harish.M says:

  இந்த தலைப்பில் ஒரு பதிவை வெளியிட எண்ணியிருந்தேன்,என்னால் நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனால் நல்ல வேலையாக நீ வெளியிட்டு விட்டாய்.உன் எண்ணங்களும் சிந்தனைகளும் என்னைப் போலவே உள்ளனவடா..க க க போ!!!

  பொன்னியின் செல்வன் பற்றி நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. தமிழில் வரலாற்று புதினங்களுக்கு பொன்னியின் செல்வன் ஒரு அஸ்திவாரம் எனச் சொன்னாள் மிகையாகாது.

  இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல என்னாலும் ஒரு சில நூல்கள் வாங்க முடியாமல் தான் போனது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஒன்று இங்கு குறிப்பிட்டுள்ளதை போல் 'விலை' மற்றொன்று புத்தகத்தை வைக்க பையில் இடமில்லாமல் போனது சு.வெங்கடேசனின் காவல் கூட்டத்தை அதனால் தான் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டேன்.உயிர்மையில் சுஜாதா அவர்கள் எழுதிய சில புத்தகங்கள் வாங்கினேன்..'நில்லுங்கள் ராஜாவே' என்கிறது ஒரு புத்தகத்தின் தலைப்பு,'நீங்கள் செல்லுங்கள் ராஜாவே' என்கிறது என் சட்டை பையிலிருக்கும் பண இருப்பு..சரி அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என விட்டுவிட்டேன்('செல்லுங்கள் ராஜாவே' என்ற கட்டளையை பின்பற்றினேன் :-)"

  பிரபல பேச்சாளர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிராய்.அன்று நான் லேனா.தமிழ்வாணன் அவர்களின் சுவையான சொற்பொழிவை கேட்க முடிந்தது.சிறப்பான பதிவு!!!

  நன்றி - ஹரிஷ்.