கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தீபாவளி ஒரு சிந்தனை




நண்பர்களே தீபாவளி நெருங்கி விட்டது.இந்த நேரத்தில் இந்தப் பதிவை வெளியிடுவது தான் உசிதமென்று கருதுகிறேன்.இதை விடுமுறை தினச் சிறப்புப் பதிவு என்று கூட வைத்துக் கொள்ளலாம்(சில பகுத்தறிவு ஊடகங்கள் சமீபகாலமாக அப்படித்தான் விளம்பரப் படுத்துகின்றன).

தீபாவளி என்றாலே இயல்பாகவே அனைவர் மனத்திலும் ஒருவித குதூகலம் குடி கொண்டு விடுகிறது.புத்தாடைகள், பலகாரங்கள்,புதிய திரைப்படங்கள்,'பட்டாசுகள்' என நாடே அமர்க்களப்பட்டுவிடுகிறது.ஆனால் ஒரு விஷயம். தீபாவளியப் பற்றிய நமது புரிதல் சரி தானா?நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற தினத்தையே தீபாவளி என்று இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.இந்தப் பண்டிகையன்று வீடு முழுக்க விளக்கேற்றிக் கொண்டாடுவது மரபு. தீபாவளி அன்று நம் காது கிழியும் அளவுச் சத்தங்கள் கேட்கும்.யானை வெடி,பிஜிலி பட்டாசு,செவென் ஷாட்,டபுள் ஷாட்,ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா சரங்கள்,ராக்கெட்டுகள் என பல விதப் பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாடுகிறார்கள். இரவு நேரங்களில் சங்கு சக்கரம்,புஸ் வானம்,மத்தாப்புக்கள் என வெளிச்சம் தரும் பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன.

ஆனால் பட்டாசு வெடித்தே இந்தப் பண்டிகைக் கொண்டாட வேண்டுமென்பதில்லை.இந்த தீபாவளி என்பது என்ன? 
தீபஒளி.தீபம் + ஒளி = தீபாவளி.ஆக,இதை விளக்குத் திருவிழா என்று பொருள் கொள்ளலாம்.ஆனால்,இன்று நாட்டில் இதை சப்தங்களின் திருவிழாவாகத் தான் கொண்டாடுகிறார்களே தவிர,விளக்குத் திருவிழாவாக கொண்டாடுவதில்லை. குடிசை நிறைந்த பகுதிகளில் விடப்படும் ராக்கெட்டுகளால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. டிரான்ஸ்போர்மேர்களில் இந்தப் பட்டாசுகள் பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.திரியைக் கில்லி பட்டாசு கொளுத்தி விட்டு வரும் சிறுவர்கள்,இளைஞர்கள் அதே கையுடன்(கை கழுவாமல்) பலகாரம் சாப்பிடுகிறார்கள்(அனைவரும் இப்படிச் செய்வதில்லை என்றாலும்,ஒரு சிலர் இதைச் செய்கிறார்கள்).இதனால் பல விதமான வியாதிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.

சரி.இந்தப் பட்டாசுத் தான் எங்கிருந்து வருகின்றது?இதைத் தயாரிப்பவர்கள் தான் யார்?கீழே உள்ளப் படத்தைப் பாருங்கள்.இந்தப் பட்டாசுகள் சிவகாசியிலிருந்துத் தயாராகின்றன.சீருடை அணிந்துப் பள்ளிக்குச் சென்று புத்தகத்தையும் எழுதுகோலையும் பிடிக்க வேண்டிய கைகள் வெடிமருந்தைப் பிடித்துள்ளன.இந்தச் சிறுவர்களின் எதிர்காலத்தை இருளாக்கித் தான் ஒளி வீசும் இந்த மத்தாப்புக்கள் செய்யப்படுகின்றன.

இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என்னவென்றால் வறுமையில் வாடும் இந்த சிறுவர்களுக்குக் கல்வியப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில சமூக சேவை புரியும் இயக்கங்களைக் கொண்டு இதைச் செய்யலாம். இது போல சிறுவர்களை பணிக்கமர்த்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வழி செய்யலாம்.ஆனால் இவை அனைத்துக்கும் சரியான திட்டமிடுதல் வேண்டும் மற்றும் இதைச் செயல்படுத்த அவகாசமும் வேண்டும்.நம்மளவில் உடனடியாக என்ன செய்ய இயலும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

நான் முன்பு குறிப்பிட்டதைப் போல இது தீபங்களின் பண்டிகை தான்.சப்தத்தின் பண்டிகை அல்ல.இது போல பல சிறுவர்களின் வாழ்வை அழித்து செய்யப்படும் பட்டாசுக்களை நாம் பணம் கொடுத்து வாங்கி வெடிக்கத்தான் வேண்டுமா? இந்த வெடிச் சத்தங்கள் இதய நோயாளிகளின் உயிருக்கே உலை வைக்கும் திறன் கொண்டவை. பலவித ஆபத்துகளையும் விளைவிக்கவல்ல இந்த வெடிகளையும் மத்தாப்புக்களையும் நாம் கொளுத்தத் தான் வேண்டுமா?சிந்தியுங்கள் தோழர்களே.



இப்படிப் பட்டாசுகளுக்கெதிராக நான் எழுதுவதால் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்றோ அல்லது இந்து மதம் மீது துவேஷம் கொண்டவன் என்றோ கருத வேண்டாம்.எனது மற்றொரு வலைப்பூவான(http://dream---life.blogspot.com) ஐ தொடர்ந்துப் படித்தவர்கள்/படிப்பவர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. நான் ஒன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறிவைத்து இப்படியெல்லாம் எழுதவில்லை.இந்த வலைப்பூவைப் படிப்பவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாகத் தான் இருக்க முடியும்.இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானோர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான். இன்றும் பலர் பட்டாசு வெடிப்பதில் ஏக ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர், இந்தப் பதிவைப் படித்தப் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் கூட அது நமக்கொரு வெற்றி தான். 

நான் ஒருவன் இதை எழுதுவதால் தமிழகத்தில் உள்ள அனைவரும் பட்டாசுக்களைப் புறக்கணித்துவிடப் போவதில்லை. ஆனால் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்.நாம் ஏன் அந்த ஆரம்பமாக இருக்கக் கூடாது?இதன் காரணமாகவே நான் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிப்பதில்லை. சிந்தியுங்கள்.....

தீபஒளித் திருநாள் அன்று இல்லங்களில் தீபம் ஏற்றுவோம்.நம் வாழ்விளிருக்கும் இருள் விலகி ஒளிமயமான எதிர்காலம் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துக்கள்!!!!!

3 Responses so far.

  1. Anonymous says:

    உங்களை போலேவே எங்கும் இந்த தீபாவளி பற்றி கருத்து உண்டு. இது வரை எழுதியதில்லை. காரணம் மத துவேஷம் என்று ஒரு முத்திரை விழும். உங்களின் முந்தைய கட்டுரை படித்ததால், இங்கே நான்.

    சிவகாசி பிள்ளைகள் பற்றி, நாம் அனைவரும் ஒரு நாள் பட்டாசு வெடிக்க ஒரு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ( குழந்தை கல்வி, குழந்தை வேலை சட்டம், கட்டு படுத்துவது அது அரசாங்கத்தின் வேலை 5 வருடத்திற்கு ஒரு முறை அனைவர்க்கும் அந்த வாய்ப்பு உண்டு.) அதனால் நாம் வருடத்திருக்கு ஒரு முறை வெடிக்கவில்லை என்றால் ஒரு வருடத்திற்கான சாப்பாட்டில் மண்.

    சப்தம், கைகழுவாமல் சாப்பிடுவது, transformer / குடிசை எரிவது எல்லாம் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை புரிந்து செய்ய வேண்டியது.
    குழந்தைகளை அப்படி பார்த்து கொள்ள வேண்டியவர்களின் கடமை அது.

    வயதானவர்கள்/ இருதயம் பாதிப்பு உள்ளவர்கள் அருகில் இதை செய்யாமல் இருப்பது உத்தமம். ஆனால் இதையும் செய்யவேண்டியவர்கள் குழந்தைகளை பார்த்து கொள்பர்வர்களின் கடமை. 10 மணிக்கு பிறகு வெடிக்காமல் செய்வது சட்டத்தின் கடமை, மதிப்பது நமது கடமை.

  2. Kris says:

    நல்ல கருத்து!
    "விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி" பற்றி: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அரசியல்வாதிகளின் சார்புடைய ஊடகங்கள் வேறு எப்படி இருக்கும்?
    மேலும், இந்த விடுமுறை நாளை தொலைக்காட்சிமுன் "கழிப்பதையும்" ஒரு பிடி பிடித்திருக்கலாம்.
    நல்ல கருத்தை சொல்லவதற்கு மத சார்பு / சார்பின்மை எதுவும் தேவை இல்லை. தைரியமாக நீங்கள் சொல்ள்ளவேண்டியத்தை சொல்லலாம். ;)
    மற்றபடி சிறுவயதில் சஞ்சிகைகளில் படித்து இந்த பழக்கத்தை நிறுத்தியவர்களில் நானும் ஒருவன். இன்னமும் குழந்தைகளின் குதூகலத்தை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை.

  3. This comment has been removed by the author.