கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தீபாவளி - மகிழ்ச்சி பொங்கட்டும் அடுத்தவர் புன்னகையில்            இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு என்னை முதலில் அறிமுகம் செய்துக்  கொள்கிறேன். என்னை பற்றி பெரிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை, இருப்பினும் என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் என் பதிவைப் படிக்க உங்களுக்கு எந்த ஒரு தூண்டுதலும் இருக்காதல்லவா ? பயப்பட வேண்டாம்.  நான் அரசியல்வாதி போல் சினிமாக்காரரை போல் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி பேசும் ஆளாக இருக்க விரும்பவில்லை.  கணினித் துறையில் என்ன வேலைச் செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை செய்யும் கூட்டத்தில் நானும் ஒருவன்.  அடுத்தவரை கலாய்பதையே  வேலையாய் கொண்டவன். இந்த வலைப்பூவில் எனக்கும் என் பதிவை பதிக்க அனுமதிக்கலாம என்று சற்று யோசித்து பார்த்து அனுமதித்து தான் பார்ப்போம் என்று அனுமதித்த என் நண்பனுக்கு நன்றி. இந்த வலைப்பூவில் எனது முதல் பதிவை எனக்கு மனதில் பட்டதை எழுதுவதற்கு சுதந்திரம் கொடுத்த என் நண்பனுக்கும் மற்றும் சிவகாசியில் வேலை செய்யும் ஏழை எளிய சிறுவர்களுக்கு அர்பணிக்கிறேன்.

             நான் தமிழ்ப் பண்டிகைகளை மிகவும் விரும்பி கொண்டாடுபவன். அதிலும் இந்த தீபாவளித் திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். இதனால் என்னை இறைபக்தி மிகுந்தவன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். எனக்கு பொதுவாகவே அதிக சந்தேகம் எழுவது வழக்கம். தீபாவளி எதற்கு கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தினர் கிருஷ்ண பகவானும் அவரது மனைவி சத்யபாமா அவர்களும் சேர்ந்து நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை தீபாவளி என கொண்டாடுகிறார்கள். ஜெயின் மதத்தினரை கேட்டால் மோக்ஷம் அடைவதற்கு உகந்த நாளை தீபாவளித் திருநாள் என்கிறார்கள். எது எப்படியோ, புராணம் முக்கியம் இல்லை. நமக்கு தேவைப் புத்த்தாடைகள், சாப்பிடப்  பலகாரம், தொலைகாட்சியில் புதுப்  படங்கள் மற்றும் அடுத்தவர் நிம்மதியையும் அமைதியையும் கெடுக்க பட்டாசுகள். எருமைப் போல் வளர்ந்திருக்கும் எனக்கே இவற்றை கண்டால் பிடிக்கும். சிறுவர்களுக்கு பிடிக்காதா என்ன ?

             எனக்குத் தீபாவளி மீது எந்தக் கோபமும் கிடையாது, கொண்டாடக் கூடாது என்று சொல்லவும் எனக்கு உரிமையோ தகுதியோ கிடையாது. நானே தீபாவளிக் கொண்டாடுவேன், இந்த ஒரு பண்டிகைக்கு மட்டும் தான் சாதி மதம் பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். சந்தோஷம் நிறையும் நாள். அதற்கு மறுபக்கம் இருப்பதை யாரும் உணர்வதில்லை. தீபாவளி என்றால் சிறுவர்களுக்கு முதலில் உதயம் ஆகும் சிந்தனை பட்டாசு. அது எப்படி தயார் ஆகிறது, யார் அதைத் தயாரிகிறார்கள், யார் யார் அதில் சமந்த பட்டிருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். பட்டாசு கொளுத்துவது குற்றம் என்று சொல்லவில்லை. அதே சமயம் இந்தப் பட்டாசு கலாச்சாரம் எப்படி வந்தது என்று சற்று சிந்திக்க வேண்டும். பட்டாசு கொளுத்தினால் தான் தீபாவளியா ? சிறுவர்கள் பட்டாசு கொளுத்துவதை குற்றம் சொல்ல முடியாது ஏனெனெனில் அவர்கள் சிறுவர்கள். ஆனால் பெரியவர்களும், இளைஞர்களும் இதில் பெரும் பங்கு கொள்கிறார்கள் என்பது தான் வருத்தம்.

            வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை பதிவு செய்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இருப்பினும் நடந்த உண்மையை நடக்கும் சம்பவங்களை உங்கள் முன் நிறுத்தினால் சற்று யோசிக்க மாட்டீர்களா என்ற நப்பாசை தான். உதவும் உள்ளங்கள் என்ற நிறுவனம் உயர் திரு. ஷங்கர் மகாதேவன் அவர்களால் பதினொரு வருடங்களுக்கு  முன் நிறுவப்பட்டு ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அவர் மூலமாக அதனை பற்றி தெரிந்தோர் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றனர்.காசு மட்டும் கொடுத்து உதவாமல், மக்களுக்கு முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு, கல்வியின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லும் வகையில் ஒரு குழு ஒன்றை அமைத்தனர். அதில் பெரும்பாலும் இளைஞர்களே. இவர்களது வேலை என்னவென்றால் கிராமப்புறப் பள்ளிகளுக்கு மற்றும் இடங்களுக்கு சென்று கல்வியைப் பற்றி எடுத்துக் கூறுவது தான். இதே வேலையாகத் தான் என் நண்பன் ஒருவன் சிவகாசிக்குச் சென்றிருந்தான். அங்கு அவன் ஒரு குழந்தையிடம் பேசியிருக்கிறான். அக்குழந்தை என்ன தொழில் செய்து கொண்டிருந்தது தெரியுமா ? சங்குசக்கரம் வைக்கும் அட்டைப் பெட்டி செய்யும் வேலை. படிக்கிற வயதில் பிஞ்சு கைகளில் புத்தகம் இருக்க வேண்டிய சிறுக்  கைகளில் என்னவிருக்கிறது பாருங்கள்.  அவளிடம் பேசியப் போது கிடைத்த அதிர்ச்சித் தகவல் என்வென்றால்... ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அப்படி செய்தால் நான்கிலிருந்து ஐந்து கிலோ அட்டை செய்யலாம். ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கிடைக்கும். அதாவது ஒரு கிலோ அட்டை செய்தால் நான்கு ருபாய், ஒரு நாளைக்கு இருபது ரூபாய். எட்டு மணி நேர உழைப்புக்கு இருபது ருபாய் சம்பளம்.  என்ன கொடுமை சரவணன் இது!!!!


             

         அந்த சிறுமியின் பெற்றோர்களிடம் கேட்டோம், ஏன் உங்களது பிள்ளையைப் படிக்க வைக்காமல் வேலை செய்ய அனுப்பியிருக்கிறீர்கள் என்று, அதற்கு அவர்கள் தந்த பதில்... "எனக்கு மட்டும் ஆசையா என்ன ? இருநூறு ரூபாய் கொடுத்தால் நானும் என் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறேன்"  என்றனர். அந்த இருநூறு ரூபாய் ஒரு நாளைக்கு அல்ல ஒரு மாதத்திற்கு. நாம் ஒரு வேளை உணவகங்களில் ஒருவருக்கு செலவு செய்யும் காசு. இதை சிந்தியுங்கள். பட்டாசு கொளுத்தக் கூடாது என்பது என் நோக்கமல்ல.பட்டாசு கொளுத்துங்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள். அதே சமயம் சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு கடுகளவு. ஆனால் அவர்களுக்கு  அது கடலளவு.  உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஆனால் எப்படி செய்வது எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா ? உதவும் உள்ளங்களை நாடுங்கள்.  கருத்து சொல்வது சுலபம், ஆனால் அதன்படி செயல்படுவது கடினம். என்னால் முடிந்த  வரை முயல்கிறேன். 

        தீபாவளித் திருநாளில் சந்தோஷம் நிறையட்டும், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிப் பொங்கட்டும். உங்களது மகிழ்ச்சி அடுத்தவர்களின் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.  சந்தோஷமான மற்றும் பாதுகாப்பான தீபாவளி அமைய எனது வாழ்த்துக்கள்.

உதவும் உள்ளங்கள் 
60/34, சவுத் உஸ்மான் ரோடு, 
நதேள்ள ஜெவேல்லேரி க்கு அருகில்,
சென்னை, இந்தியா - 600017

Udhavum Ullangal
60/34, South Usman Road, 
Next to Nathella Jewellery, 
Chennai, India 600017

இனைய தளம்: http://www.udhavumullangal.org.in

4 Responses so far.

 1. JAGAN says:

  பொதுநல நோக்கத்தோடு எழுதிய பதிவு. அருமை

 2. Harish.M says:

  எழுத்தாளர் அரவிந்தை வரவேற்பதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன். எனது முந்தையப் பதிவின் தொடர்ச்சி போல் இந்தப் பதிவு தற்செயலாக அமைந்து விட்டது.இதில் நிறைய உருப்படியான தகவல்கள் உள்ளன.இதுவரை இந்த வலைப்பூவில் பதிந்த பதிவுகளிலேயே சிறந்தப் பதிவு என்று இதைக் குறிப்பிடலாம்.நன்றி!!

 3. Aravind says:

  நன்றி.. எனது பதிவு சிறந்தது என்று பேர் பெறுவதை விட இந்த பதிவை படித்து நல்லது நடந்தால் அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி தரக்கூடியாதாக இருக்கும்.

 4. I went through the blog about child labor at Sivakasi. I felt terribly annoyed by the demand of the parents.

  Isn't it kind of an emotional blackmail that unless they are paid 200Rs, they won't let their children to school.

  Are you sure this 200Rs is not meant for expenses at TASMAC shops but only at the grocery stores.

  Government started off meal schemes to encourage rural children to go to school. Now on top of that, parents have also started to demand money to let their kids have education.

  The right way is to fine the owners of matchbox and fireworks industry for deploying child labor. Their license should be revoked if they continue to deploy child labors.

  Any industry that hire the parents for the work should support the cause of their children's education. If we do not pass strict laws against those culprits, we only end up encouraging those industrialists.