கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை


கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சமீபத்தில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதில் "ஓரளவு" வெற்றியும் கண்டு விட்டார்கள்.சமீப காலமாக உண்ணாவிரதம் இருப்பது ஒரு விதமான வாடிக்கை ஆகி விட்டது.சில சமயங்களில் அது வேடிக்கையாக காட்சி அளிக்கிறது.இந்த வாடிக்கை வேடிக்கைகளைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.இந்த கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதில் என்ன பிரச்சினை?

1988ஆம் ஆண்டு இந்திய அரசும் ரஷிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.ஆனால் திடீரென கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த அணு மின் நிலையத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.அரசியல் கட்சிகள் தம் பங்கிற்கு அப்பகுதி மக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.

இத்தனை நாள் இல்லாத எதிர்ப்பு இப்போது எழுவதற்கு காரணம் என்ன? ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி மக்களை வெகுவாக பாதித்து விட்டதென்றும் அதன் விளைவாகவே இந்த போராட்டங்களும் எதிர்ப்புகளும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் நம் மக்களிடையே இப்படி ஒரு பயத்தை உண்டாக்குவது இயல்பு தான்.ஒரு வேளை இங்கும் அது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிந்து கொள்ளக் கூடியதே.ஆனால் ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. காரணம் அந்நாட்டின் புவியல் ரீதியான அமைப்பு அப்படி.இங்கு அப்படி இல்லை.

விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் இதனால் பாதிப்பேதும் ஏற்படாது என்று தான் கூறுகிறார்கள்.2001 ஆம் ஆண்டே இந்த அணு மின் நிலையத்தைக் கட்டும் பணிகள் துவங்கி விட்டன.இந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு போராட்டங்களும் எதிர்ப்புகளும் பணிகள் முடிவடையும் நிலையில் கிளம்பி இருப்பது வியப்பாகத் தான் இருக்கிறது. தமிழகம் ஏற்கனவே மின்சார பற்றாக் குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.நானறிந்தவரையில் எந்த ஒரு தேர்தலிலும் மின் வெட்டும் மின்சார தட்டுப்பாடும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மின் வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்ற உறுதிமொழியோடு தான் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது.இவர்கள் வந்தால் ஆக்கப்பூர்வமான சில திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று எண்ணி ஒட்டு போட்ட மக்களும் உண்டு. 

இது வரையில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த அரசு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எப்போதோ துவங்கிய இந்த அணு மின் நிலையத்தின் பணிகள் சரியாக இப்போது முடிவடையும் நிலையில் உள்ளன.அதையும் நிறுத்த வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆயற்று.நமது மாண்புமிகு முதல்வர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் நோக்கம் உண்மையில் நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் இதே முதல்வர் அவர்கள் தான் சற்று தினங்களுக்கு முன்பு அணு சக்தி விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதாகவும் இந்த அணு மின் நிலையம் சகல பாதுகாப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை எனவும் கூறினார்.அப்படிப்பட்டவர் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது சுத்த அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு வேளை எதிர் கட்சிகளின் வாயை அடைக்க இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றினாரோ என்னவோ.

எதிர்கட்சிகளை அடக்குவதர்காகவா ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு தனிக்குழு அமைத்து இந்த அணு மின் நிலையம் சரியான பாதுகாப்பு வரம்பிற்குள் அமைக்கப்பட்டிருக்கிறதா?இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படுமே ஆனால் அது எந்த அளவில் இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அந்தக் குழுவிற்கு ஆணை இட்டிருக்க வேண்டும்.அந்த அறிக்கையை பொறுத்தே அணு மின் நிலையம் அமையும் என்றும் மக்களுக்கு பதிப்பு ஏற்படும் எந்த ஒரு காரியத்தையும் அரசு செய்யது என்றும் உறுதி அளித்திருந்தால் இந்த உண்ணாவிரதம்,போராட்டம் எல்லாம் நின்றிருக்கும்.அணு மின் நிலையம் அமைப்பதனால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது என்று அறிக்கை வந்தால் அணு மின் நிலையத்தை செயல்படுவதில் எந்தத் தடையும் இருக்க கூடாது.

அரசு இதைச் செய்யாமல்,குறை கூறுபவர்களை திருப்தி படுத்தும் நோக்கோடு செயல் பட்டிருப்பது ஆட்சேபத்திற்குரியது!!


20 Responses so far.

  1. Unknown says:

    அந்த பிரச்சனைய தூண்டி விட்டதே எதிர் கட்சி தானோ னு எனக்கு தோணுது

  2. நல்ல பதிவு... கட்டுரையிலும்,ஆராய்ந்திருக்கும் விதத்திலும் பொறுப்புணர்ச்சி தெரிகிறது...ஆம் , தமிழக அரசு இந்த விஷயத்தை ஒழுங்காக கையாண்டிருக்கலாம்... மற்றபடி நீ சொல்லியிருப்பது போல் இப்போது எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி விட்டது..அணுமின் விவகாரம் கூட பரவில்லை ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற கூடாது என்று நடந்த போராட்டத்தை எல்லாம் எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை .அந்த பிரச்சனையிலும் தமிழக அரசு போராட்டகாரர்களுக்கு பணிந்து தீர்மானம் நிறைவேற்றியது ஆட்சேபனைக்குரியது..

  3. Kris says:

    உங்கள் கருத்தில் முற்றிலும் மாறுபடுகிறேன்,
    ௧. அரசியல்வாதிகள் மட்டும் இந்த போராட்டத்துக்கு பின்னால் இல்லை, நிறைய சமூக ஆர்வலர்களும் உண்டு.
    ௨. உங்கள் ஆட்சேபனை நிலநடுக்க பீதியை மட்டும் மையம் கொண்டிருந்தாலும் அது நிகழ வாய்ப்பே இல்லை என யாராலும் உறுதியாக கூற முடியாது. ஒருவேளை ஜப்பானில் நடந்த பயங்கரம் பொதுமக்களுக்கு அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் போராட்டம் சூடுபிடித்திருக்கலாம்.

    ஆனால் அணுஉலை எதிர்ப்பு காலம் காலமாக உள்ளது.
    இதைப்பற்றி மேலும் அறிய சுட்டி:



    கடைசியாக, அனல் மின் உற்பத்தியில் சிறிது காலம் பணிபுரிந்ததாலும், கருவியியல் மற்றும் தானியக்க (Electronics & Instrumentation engineering - Automation)பொறியியல் கற்ற அடிப்படையிலும் நூறு சத பாதுகாப்புடைய மின் உற்பத்தி, பசுமை மின் உற்பத்தி மட்டுமே, (அங்கேயும் கூட கட்டுமானத்தின் போது கவனம் தேவை)

    தயவு செய்து போபால் விசவாயு சம்பவத்தையும் படிக்கவும், அதனை முழுமையாக படித்தால் உங்களுக்கு புரியும் - நமது இந்திய அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வல்லது. எந்த அரசியல்வாதிக்கும் பொதுமக்களை பற்றிய அக்கறை துளியும் கிடையாது.

  4. Kris says:

    அன்புள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு

    வணக்கம்.

    கூடன்குளம் அணு உலைக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை மக்கள் திரண்டு நடத்தியதையடுத்து ஒரு வாரம் கழித்தேனும் நீங்கள் போராட்டக் குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை முதலில் பாராட்டுகிறேன். பிரச்சினைக்கு தீர்வு காணும்வரை அணு உலை வேலைகளை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்குக் கடிதம் எழுதியதையும், அதே போன்ர ஒரு தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டம் நடத்தி நிறைவேற்ற ஒப்புக் கொண்டதையும் பாராட்டுகிறேன். மக்களின் உணர்வுக்கு இவையெல்லாம் தற்காலிகமான ஆறுதல்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    அடுத்தது என்ன என்பதே முக்கியம். பிரதமரை சந்திக்க ஒரு அனைத்துக்கட்சி, மக்கள் அமைப்பினர் குழுவை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அந்தக் குழு மாநிலத்தின் சார்பில் மக்கள் சார்பில் பிரதமரிடம் என்ன சொல்லப் போகிறது என்பதும் அவர் பதிலுக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதும்தான் இனி முக்கியமானவை.

  5. Kris says:

    கூடன்குளம் அணு உலைக்கு செர்னோபில், ஃபூகுஷிமா உலைகளுக்கு ஏற்பட்ட கதி நிச்சயம் ஏற்படாது என்று மன்மோகன்சிங் சோனியா காந்தி தலையில் அடித்து சத்தியம் செய்வார். அதைக் கேட்டு ஒப்புக் கொண்டு உங்கள் குழு திரும்பிவரப் போகிறது என்றால், அதை விட தமிழக மக்களுக்கு பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது. உலகத்தில் நூறு சதவிகிதம் பாதுகாப்பான அணு உலை என்று எதுவும் கிடையாது என்பது விஞ்ஞானிகளே ஒப்புக் கொள்ளும் உண்மை. அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தில் சென்று மோதிய விமானம் போல ஒன்று கல்பாக்கத்தில் மோதினால், கோபாலபுரம், போயஸ் கார்டன் உட்பட சென்னை நகரமே கதிர்வீச்சில் காலியாகிவிடும் என்பதுதான் உண்மை.

    சில அடிப்படை உண்மைகளை தயவுசெய்து உங்கள் குழு இந்த சமயத்தில் மனதில் கொள்ள வேண்டும்.

    மன்மோகன் அரசு வெளி நாட்டு அரசுகளுடன் இப்போது போட முற்படும் வர்த்தக ஒப்பந்தங்களின்படி , அணு உலைகள் நிர்மாணிக்கும் பணி இனி தனியாரிட்ம தரப்படும். அந்த அரசுகள் தங்கள் நாட்டுத் தனியார் நிறுவனங்கள் நிர்மாணிக்கும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈட்டை ஓரளவுக்கு மேல் தரமுடியாது என்றும் இந்திய அரசேதான் தரவேண்டுமென்றும் சொல்லுகின்றன. போபால் விபத்தில் நஷ்ட ஈடு பிரச்சினையே இன்னும் தீரவில்லை. சாதாரண ரசாயன ஆலை விபத்து அது. அதுவே பல தலைமுறைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துவிட்டது. அணு உலை விபத்து பல மடங்கு அதிகமாக பாதிக்கக்கூடியது என்பதற்கு ஜப்பான் சாட்சி.

    கூடன்குளம் உலைக்கு எந்த விபத்தும் நேராது, எந்த தாக்குதலும் நடக்காது, எந்த இயற்கைப் பேரழிவும் வராது அப்படி எது நடந்தாலும் அந்த உலை பத்திரமாகவே இருக்கும் என்ற பிரும்மாண்டமான கற்பனையை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும், அணு உலை இயங்குவது என்பதே சுற்றிலும் வாழும் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை நீங்கள் கவனித்தாக வேண்டும். அதிலிருந்து வரும் கதிரியக்கம் மெல்ல மெல்ல சுற்றுப்பகுதி மக்களின் உடல்நிலையை பாதிக்கிறது என்பதும், அதிலிருந்து கடலில் வெளியேற்ற்ப்படும் சூடான நீர், மீன்வளத்தை பாதிக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மைகள்.

  6. Kris says:

    ஒரு அணு உலை கட்டுவதற்கு 10 முதல் 20 வருடங்கள் வரை ஆகிறது. கட்டி இயங்க ஆரம்பித்தால் அதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 வருடங்கள்தான்.ஆனால் அதில் உருவான அணுக்கழிவுகளின் கதிர் இயக்கம் பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால் அத்தனை காலமும் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். முழு பத்திரமாக வைத்திருக்க உலகில் எங்கேயும் இன்னமும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் அணுக்கழிவுகள் வைக்கப்பட்டிருக்கும் பல இடங்களில் கதிரியக்கக் கசிவு எற்பட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

    கல்பாக்கத்தில் பல அணு உலைகள் உள்ளன. அவற்றில் இதுவரை பல விபத்துகள் நடந்திருக்கின்றன. ஊழியர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னால் அங்கே ஊழியர்களின் தொழிற்சங்கம் நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் பல விபத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் செய்வோம் என்று அச்சுறுத்தியபிறகுதான் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டன. ஒவ்வொரு ஊழியரும் ஓராண்டில் அதிகப்ட்சம் எந்த அளவு கதிர் வீச்சுக்கு உள்ளாகலாம் என்ற வரையறைகள் மீறப்படுகின்றன. முழு விவரத்தை ஊழியருக்கே சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தற்காலிக வேலைகளுக்காக சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்து தினக்கூலிக்கு அழைத்து வரப்படும் ஊழியர்களுக்கு என்ன கதிர்வீச்சு ஏற்படுகிறது என்ற தகவல் கூட சொல்லப்படுவதில்லை,.அணு உலை நிர்வாகம் எப்போதும் பொய் சொல்வதையும் மூடி மறைப்பதையும் மழுப்புவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில்தான் அணு உலையை நடத்துபவர்களே அதைக் கண்காணிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். முற்றிலும் சுயேச்சையான அமைப்பாக கண்காணிப்பு அமைப்பு இதுவரை இல்லை.எந்தத் தகவலைக் கேட்டாலும் அணுசக்தி சட்டத்தின் கீழ் ரகசியம் என்று சொல்லி மறுக்கப்படுகிறது.

    கல்பாக்கத்தை சுற்றியும் உள்ள கிராமங்களில் புற்று நோய ஏற்படுவது அதிகமாக உள்ளது.மலட்டுத்தன்மை, பிறவியிலேயே உடல் ஊனம் போன்ற சிக்கல்கள் உள்ளன. கதிரியக்கம் செல்களை பாதிப்பதால் ஆறு விரல்களுடன் குழந்தைகள் பிறப்பது கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இது பற்றி மருத்துவர் புகழேந்தி தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பல வருடம் முன்பே தெரிவித்தார். ஆனால் அவர்கள் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

  7. Kris says:

    மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் அணு உலைகளுக்கும் தேவை. சூழல் பாதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றபின்னரே பிறகே அணு உலை கட்டும் பணி ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கூடன்குள உலைகள் கட்ட ஆரம்பிக்கும் முன்பு அப்படிப்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை வெளியிடவும் இல்லை. வெளியிட்டு மக்கள் ஆட்சேபங்களை பரிசீலித்தபிறகே கட்ட அனுமதி தந்திருக்க வேண்டும்.

    வேறு எந்த தொழிற்சாலையில் விபத்து நடந்தாலும் அதன் பாதிப்பு அந்த தலைமுறையோடு முடிந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால் அணு உலை விபத்தோ,கதிரியக்கமோ பல தலைமுறைகளுக்கு பாதிப்பை தருபவை. இவ்வளவு ஆபத்தான அணு உலையை ஏன் ஆரம்பிக்க வேண்டும்?

    வேறு வழியில்லை. நமக்கு மின்சாரம் வேண்டும் என்ற வாதம் உங்களிடம் அதிகாரிகளால் சொல்லப்படும். பொய். அணு உலைகளால் இந்தியாவின் மின்பற்றாக்குறையை தீர்க்கவே முடியாது. இப்போது இயங்கும் 20 அணு உலைகளுமாக சேர்ந்து இந்தியாவின் மொத்த மின்சாரத்தில் மூன்று சதவிகிதத்தைக் கூட தர முடியவில்லை. இந்த வெறும் மூன்று சதவிகிதத்துக்காக பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 3897 கோடிகளை வருடந்தோறும் மத்திய அரசு செலவிடுகிறது. றோம். ஆனால் அதே அரசு தரும் வெறும் 600 கோடி ரூபாயில், நமக்கு ஐந்து சதவிகித மின்சாரத்தை ஏற்கனவே கொடுப்பவை காற்றாலைகளும் சூரியசக்தியும்தான். அணு உலைக்கு ஒதுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை காற்று, சூரியசக்தி போன்றவற்றுக்கு ஒதுக்கினால், இன்னும் அதிக மின்சாரம் கிடைக்கும். அடுத்த 20 வருடங்களில் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் அணு சக்தியிலிருந்து கிடைக்கப்போகும் மின்சாரம் ஆறு சதவிகிதம்தான். 25 சதவிகித மின்சாரத்தை அணு சக்தியிலிருந்து பெறும் பிரான்ஸ் நாடு அடுத்த 20 வருடங்களுக்குள் அத்தனை உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது.

  8. Kris says:

    அணு சக்திக்கு இந்தியா அதிக பணம் ஒதுக்குவதற்குக் காரணம் மின்சாரமே அல்ல. அணுகுண்டு தயாரிக்க அதிலிருந்துதான் கச்சாப்பொருள் கிடைக்கிறது என்பதுதான் ஒரே காரணம்.

    எனவே மின்சாரம் தேவையென்றால் மாற்று எரிசக்தி பற்றி யோசியுங்கள். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் வீணாகக் கிடக்கும் வேலிகாத்தான் உடைமரங்களை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிறு ஆலைகளை நிறுவி உள்ளூர் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் இது நடந்துகொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் இதை பெரும் வீச்சில் செய்ய திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்திலும் பஞ்சாயத்து யூனியன் ஒவ்வொன்றிலும் சிறுமின் திட்டங்களை ஆரம்பிக்கலாம்.

    கூடன்குளம் பாதுகாப்பானதுதான் என்று சொல்லி உங்கள் குழுவினரை ஏமாற்ற மத்திய அரசு அதிகாரிகள் எல்லா முயற்சிகளும் செய்வார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வையுங்கள். கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன என்பதையும், கல்பாக்கத்தை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணு சக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லுங்கள். அதன் பிறகுதான் கூடன்குளம் பற்றி முடிவெடுக்க முடியும் என்று சொல்லுங்கள்.

    1988-89ல் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் முரசொலி மாறனுக்கு எடுத்துச் சொன்னோம். அதையடுத்து கூடன்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போட்டது. அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. அன்று அந்த துரோகம் நடக்காமல் இருந்திருந்தால், கூடன்குளம் உலை கட்டும் வேலையே நடந்திராது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.

  9. Kris says:

    ஏறத்தாழ ஆரம்பிக்கத் தயார் நிலையில் கூடன்குளம் அணு உலையை எப்படி ஒரேயடியாக மூடுவது என்று கேட்பார்கள். கட்டி முடிக்கப்பட்ட சட்டமன்றக் கட்டடம் வசதிக் குறைவானது என்பதால், அதை காலி செய்துவிட்டுப் போனவர் நீங்கள். வசதிக் குறைவுக்கே அப்படி செய்யலாம் என்கிறபோது, பல தலைமுறைகளுக்கே ஆபத்தான ஆலையை மூடத் தயங்க வேண்டியதில்லை. சூழலுக்குக் கேடான சேது சமுத்திரம் திட்டம் பல் கோடி ரூபாய் செலவுக்குப் பின் இப்போது நிறுத்தப்ப்டவில்லையா ? இதுவரை எவ்வளவு செலவாயிற்று என்பது முக்கியமில்லை. இனி தரப்போகும் விலை என்ன என்பதே முக்கியம்.

    உங்கள் புகழ் பெற்ற பிடிவாதத்தை இதில் நீங்கள் காட்டினால் தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களை வாழ்த்துவார்கள்.

    அன்புடன்

    ஞாநி

    இந்த வார அறிவிப்பு

    ஊழலை விட பெரும் ஆபத்தான அணு உலைப் பிரச்சினைக்கு முன்னுரிமை தர வேண்டி வந்ததால் ஊழலே உன் வேர் எங்கே தொடரின் அடுத்த பகுதி அடுத்த வாரம்.

    கல்கி 24.9.2011

  10. Kris says:

    பின்னுட்டத்துல லிங்க் போட முடியல அதனால மேலே மீள்பதிவு
    ஞாநி அருமையாக சொல்லுவார்: அணுக்கதிர்வீச்சு வெளிப்பட்டால் அது ஏழை பணக்காரன், பொதுமக்கள், அரசியல்வாதி என்றெல்லாம் பிரிச்சு பார்க்கதுன்னு எல்லாருக்கும் சமாதிதான்.

    ஆனா எனக்கு தோணுது:(ஒருவேளை கல்பாக்கத்துல ஒரு விபத்துன்னா) செய்தி வெளிப்பட்டதும் அரசியல்வாதி ஹெலிகாப்டர்லையும், விமானத்துலையும் பறந்துருவான் (பணக்காரனும் தான்) நாம என்ன பண்றது?

  11. Harish.M says:

    Kris - தங்களுடைய கருத்துக்கள் சில நல்ல தகவல்களைத் தந்துள்ளன.நன்றி.இந்தப் பதிவின் மூலமாக நான் முழுவதுமாக அணு சக்தியை ஆதரித்துவிடவில்லை அல்லது அணு சக்தி மிக மிக அவசியம் என்றும் சொல்லவில்லை.. என்னுடைய கேள்வி எல்லாம் இத்தனை காலம் இந்த மக்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை? இந்த 23 ஆண்டுகளில் அணு சக்தியைப் பற்றி பல செய்திகள் வந்துள்ளன.அணு சக்தி ஒப்பந்தத்தை கம்யுனிஸ்டுகள் எதிர்த்து ஆதரவை விலக்கி கொண்ட போது இந்திய அரசே கூட கவிழும என்கிற நிலை தோன்றியது.அப்போதெல்லாம் தோன்றாத இந்த எதிர்ப்பு இப்போது திடீரென்று தோன்றி இருப்பது சில சந்தேகங்களை எழுப்பத்தான் செய்கிறது.

  12. Harish.M says:

    அணு சக்தி மட்டுமல்ல எந்த ஒரு தொழில்நுட்பமும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல.இதே போன்ற அணு மின் நிலையங்கள் கைகா,தாராபூர் போன்ற இடங்களில் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன.அங்கு இயங்குவதால் இங்கு எந்த பிரச்சினையும் வராது என்பது அல்ல என் வாதம்.இந்த அணு மின் நிலையத்துக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.இப்போதாவது சரியான அணுகுமுறையை கடைபிடிக்கலாமே என்பது தான் என் கருத்து.

    இந்த விஷயத்தில் விஞ்ஞானிகளிலேயே கூட இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.இந்த இரு தரப்பினரையும் சேர்த்து ஒரு குழு அமைக்கலாமே.அமைத்து சரியான ஆய்வு செய்து ஒரு அறிக்கையை சமர்பிக்கலாம்.அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த அணு மின் நிலையத்தைத் தொடர்வதா அல்லது மூடுவதா என்ற முடிவுக்கு வரலாம்.மக்கள் போராட்டம் நடத்துகிறார்களே என்று ஒரு தீர்மானத்தைப் போட்டு அவர்கள் வாயடிப்பது அரசியலில் தவறான அணுகுமுறை.இவரின் இந்தச் செயலினால் ஞானி அவர்கள் சொன்னதைப் போல பிரதமரின் சத்தியத்தை நம்பி அணு மின் நிலையம் தொடரத்தான் போகிறது.

  13. Harish.M says:

    இந்த அணு மின் ஒப்பந்தத்தை எதிர்த்து நான் முன்னமே எழுதி இருக்கிறேன். இந்த வலைப்பூவைப் பாருங்கள் புரியும்.

    http://dream---life.blogspot.com/2010/06/massacre-of-justice.html

  14. Harish.M says:

    @Jagan - எந்த எதிர்க் கட்சின்னு சொல்லலையே :D

  15. Harish.M says:

    //ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற கூடாது என்று நடந்த போராட்டத்தை எல்லாம் எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை .அந்த பிரச்சனையிலும் தமிழக அரசு போராட்டகாரர்களுக்கு பணிந்து தீர்மானம் நிறைவேற்றியது ஆட்சேபனைக்குரியது..//

    இந்தக் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்

  16. Kris says:

    Rajeev Gandhi:
    http://www.vinavu.com/2011/09/07/justice-at-the-gallows/

  17. Kris says:

    1991-இல் ராஜீவின் உடலைக் கண்டு தமிழகம் அழுததும், அந்தக் கண்ணீரை ஓட்டுகளாக ஜெயலலிதா மாற்றிக் கொண்டதும் உண்மைதான். ஆனால், அது வேறு தமிழகம். இன்று, இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாமல் தோற்றது மட்டுமின்றி, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க முடியாமல் பாதுகாத்து நிற்கும் டெல்லியைக் கண்டு குமுறிக் கொண்டிருக்கிறது, ஒரு தலைமுறை.

  18. Kris says:

    இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?

  19. Kris says:

    More insight on Rajeev:

    http://www.vinavu.com/2011/08/19/political-justice-not-mercy/

    இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.

    இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும்.

  20. Harish.M says:

    நீங்கள் சொல்லுவது சரி தான்.தங்களுடைய இந்தக் கருத்து முற்றிலும் சரியே.ஆனால் அதே உச்சநீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்தாகி விட்டது.இவர்களது கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இத்தனைக்கும் பிறகு இந்த வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதே வியப்பாகத் தான் இருக்கிறது.அந்தக் கருணை மனுவை அனுமதிக்கவோ நிராகரிக்கவோ இத்தனைக் கால அவகாசம் எடுத்துக்கொண்டது நமது ஜனாதிபதிகளின் தவறு.இதைத் தவிர ராஜீவ் கொலை வழக்குப் பற்றி தாங்கள் கூறியிருப்பதில் எனக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.மீண்டும் ஒரு சிறப்பான பின்னூட்டமிட்டதற்காக நன்றி.